உலக செய்திகள்

10 வருட பிளான்..வட கொரியாவில் இருந்து தென்கொரியாவிற்கு திக் திக் பயணம்..வாலிபர் கூறும் தகவல்

அந்த நிமிடம் மிகவும் திகிலாகவும், வாழ்க்கையில் மறக்கவே முடியாது என்றும் அந்த குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சியோல்,

வடகொரியாவின் கடுமையான சட்டங்களுக்கு பயந்து, அங்கிருந்து ஒரு குடும்பமே தப்பி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வட கொரியா சகோதரர்கள், தங்களின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு படகு மூலம் தென் கொரியாவிற்கு வந்து சேர்ந்துள்ளனர் அந்த அனுபவம் பற்றி கிம் யி கியோக் கூறியதாவது:-

கிம் இல் கியோக் மற்றும் கிம் யி கியோக் சகோதரர்களின் குடும்பத்தினர் வட கொரியாவில் இருந்து படகு மூலம் தப்பித்து செல்ல முடிவு செய்தனர். இந்த திட்டத்தை பத்து ஆண்டுகளுக்கு முன்பே கிம் சகோதரர்களின் தந்தை தொடங்கிய நிலையில் அவர் தப்பித்து செல்வதற்கு முன்பே இறந்து விட்டார். கிம் இல் ஹியோக் மீன் பிடிக்கக் கற்றுக்கொண்டு, சொந்தமாகப் படகு வாங்கியுள்ளார்.

அது மட்டுமின்றி உள்ளூர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அவர்களோடு நட்பாக பழகி இருக்கிறார்.2023ம் ஆண்டு மே 6ம் தேதி புயல் வீசியதால் அன்று குடும்பத்தில் உள்ள ஒன்பது பேரும் கப்பலில் தப்பித்து செல்ல தயாராகினர். காரணம் இரவில் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும். அதே நேரம் புயல் நேரத்தில் ரேடாரில் சிக்காமல் தப்பிக்க முடியும்.

கிம் இல் கியோக்கின் மனைவி ஐந்து மாதம் கர்ப்பிணியாக இருந்தார். மேலும் சிறுவர்களை சாக்கு மூட்டையில் கட்டி மறைத்தப்படி கப்பலில் ஏற்றி இருக்கிறார்கள். சிறுவர்களிடம் யாரும் சத்தம் போட கூடாது என்று முன்பே கூறி வைத்தனர்.

கிம் சகோதரர்கள் தங்கள் தந்தையின் அஸ்தியையும் எடுத்து சென்று உள்ளனர். இரவு காவலர்களுக்கு லஞ்சம் கொடுத்து விட்டு புறப்பட்டனர். ஏற்கனவே திட்டமிட்ட வழியில் மீனவர்கள் போல படகில் சென்று இந்த குடும்பம் தென் கொரியாவுக்குள் நுழைந்து தப்பித்தது. ஆனால் அந்த நிமிடம் மிகவும் திகிலாகவும், வாழ்க்கையில் மறக்கவே முடியாது என்றும் அந்த குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இளைய சகேதரர் கிம் யி கியோக் தப்பித்து சென்ற ஒன்றரை வருடத்திலே விபத்தில் சிக்கி உயிரிழந்தார். தற்போது மூத்த சகோதரர் கிம் இல் கியோக் தென் கொரியாவில் சமையல்காரராக பயிற்சி எடுத்து வருகிறார்.