செவ்வாய் கிரக விண்கல் 
உலக செய்திகள்

சஹாரா பாலைவனத்தில் 410 கோடி ஆண்டுகள் பழமையான செவ்வாய் கிரகத்தின் விண்கல் கண்டெடுப்பு!

பூமியில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட செவ்வாய் கிரக விண்கற்களிலேயே இது மிகவும் பழமையான ஒன்றாகும்.

வாஷிங்டன்,

சஹாரா பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு விண்கல், சுமார் 410 கோடி ஆண்டுகள் பழமையான செவ்வாய் கிரகத்தின் பாறை என்பதை நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.

உப்பு சமவெளியில் கிடைத்த அரிய பாறை

மாலி நாட்டின் சஹாரா பாலைவனப் பகுதியில் உள்ள உப்புச் சமவெளியில் கடந்த 2022-ம் ஆண்டு ஒரு விண்கல் கண்டெடுக்கப்பட்டது. இதற்கு விஞ்ஞானிகள் 'டெகாசா 001' (Teghaza 001) எனப் பெயரிட்டுள்ளனர். இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் இந்த விண்கல் சுமார் 800 கிராம் எடை கொண்டது.

ஆய்வில் வெளிவந்த ஆச்சரியங்கள்

நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் லேபாரட்டரி மற்றும் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த விண்கல்லை நவீன தொழில்நுட்பங்கள் மூலம் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் முக்கிய முடிவுகள் பின்வருமாறு:-

இந்த விண்கல்லில் உள்ள எரிமலைக் கனிமங்கள் மற்றும் சிர்கான் படிகங்கள், செவ்வாய் கிரகத்தின் தெற்கு உயர்நிலப் பகுதிகளின் புவியியல் அமைப்புடன் துல்லியமாக ஒத்துப்போகின்றன. கடந்த 419 கோடி ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் நீர் மற்றும் பாறைகளுக்கு இடையே ஏற்பட்ட வேதியியல் தாக்கங்களால் இந்த விண்கல் மாற்றமடைந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

வறண்டு காணப்படும் செவ்வாய் கிரகம், கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் வெப்பமானதாகவும், நீர் வளம் நிறைந்ததாகவும் இருந்திருக்கக்கூடும் என்பதை இந்த விண்கல் நிரூபிக்கிறது. பூமியில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட செவ்வாய் கிரக விண்கற்களிலேயே இது மிகவும் பழமையான ஒன்றாகும்.

அறிவியலில் புதிய மைல்கல்

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் இருந்ததா என்பதை ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகளுக்கு இந்த 'டெகாசா 001' விண்கல் ஒரு மிகச்சிறந்த காலப் பெட்டகமாக அமைந்துள்ளது. இந்த விண்கல் தொடர்பான விரிவான ஆய்வறிக்கை புகழ்பெற்ற சர்வதேச அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT