லியோ சோர்டெல்லோ 
உலக செய்திகள்

விலங்குகளை காக்க 6 வயதில் தனி இயக்கம்; உலக நாடுகளை உற்று நோக்க வைத்த 12 வயது சிறுவன்

சிறுவன் லியோவிற்கு பிரபல இயற்கை ஆர்வலர் டேவிட் அட்டன்பரோ கடிதம் எழுதிப் பாராட்டியுள்ளார்.

லண்டன்,

மனிதர்களுக்கே மனிதநேயம் குறைந்து வரும் இந்த காலகட்டத்தில், வாயில்லா ஜீவன்களுக்காக தனது 6 வயதிலேயே தனி இயக்கம் தொடங்கி, இன்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறான் ஒரு 12 வயது சிறுவன்.

விலங்கள் பாதுகாப்பு இயக்கம்

தெற்கு லண்டனின் கேம்பர்வெல் பகுதியைச் சேர்ந்த அந்த சிறுவன் லியோ சோர்டெல்லோ. 7 ஆண்டுகளுக்கு முன்பே, விலங்குகள் மீது கொண்ட அலாதி அன்பின் காரணமாக, அவற்றை, பாதுகாக்கும் இயக்கத்தை, தொடங்கி அசத்தியுள்ளான்.

கொரோனா ஊரடங்கில் உதித்த எண்ணம்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதும் கொரோனா ஊரடங்கால் முடங்கிக் கிடந்தபோது, 6 வயதே நிரம்பிய சிறுவன் லியோ, அழிந்து வரும் விலங்கினங்களை பாதுகாப்பது குறித்து சிந்திக்க தொடங்கினான். இதற்காக யூடியூப் தளம் மற்றும் பாட்காஸ்ட் மூலம் விழிப்புணர்வுப் பிரசாரத்தை தொடங்கினான்.

13 ஆயிரம் பவுண்டுகள் நிதி

அவனுடைய மழலை மாறாத, அதேசமயம் ஆழமான கருத்துக்கள் உலக அளவில் பலரையும் கவர்ந்தன. விலங்கு தொண்டு நிறுவனங்கள் மற்றும் காடுகளை மறுசீரமைக்கும் திட்டங்களுக்காகத் தனது பிரசாரங்கள் மூலம் இதுவரை 13 ஆயிரம் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.14 லட்சத்திற்கும் மேல்) நிதி திரட்டி வழங்கி சாதனை படைத்துள்ளான்.

இயற்கை ஆர்வலர் பாராட்டு

சிறுவன் லியோவின் இந்த அசாத்தியமான சுற்றுச்சூழல் மற்றும் விலங்கின பாதுகாப்பு பணிகளை பாராட்டி, உலகின் புகழ்பெற்ற இயற்கை ஆர்வலரான சர் டேவிட் அட்டன்பரோ, தனது சொந்த கையால் கடிதம் எழுதி சிறுவனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உயரிய விருதுகள்

இதுமட்டுமன்றி, சிறுவனின் இந்த சேவையை பாராட்டி பிரிட்டிஷ் அரசு அவனுக்கு ‘பிரிட்டிஷ் சிட்டிசன் இளைஞர் விருது’ மற்றும் ‘லண்டன் ஈக்கோ சாம்பியன் விருது’ ஆகிய உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது.

சர்வதேச தூதுவர்

தற்போது இந்த 12 வயது சிறுவன், ‘பார்ன் பிரீ’ என்ற சர்வதேச வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் இளநிலை தூதுவராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறான்.

சிறுவயதிலேயே விலங்குகளின் துயர் துடைக்க போராடி வரும் இந்த சிறுவனின் அசாத்திய சமூகப்பணி, உலக நாடுகள் முழுவதிலும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

SCROLL FOR NEXT