மெக்சிகோ சிட்டி,
மெக்சிகோ நாட்டின் தமோலிபாஸ் மாகாணத்தில் உள்ள அல்தாமிரா பகுதியைச் சேர்ந்தவர் ஏஞ்சலா வெனகாஸ் ஹெர்னாண்டஸ்(வயது 17). மேல்நிலைப்பள்ளி மாணவியான இவர், அறிவியல் பாடங்களில் குறிப்பாக, எலக்ட்ரானிக்ஸ் துறையில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.
இந்நிலையில், ஒலியை பயன்படுத்தி தீயை அணைக்கும் புதிய கருவியை மாணவி ஏஞ்சலா ஹெர்னாண்டஸ் கண்டுபிடித்து அசத்தியுள்ளார். அவர் தனது கண்டுபிடிப்பை இந்தோனேசியாவில் கடந்த 14 முதல் 16-ந்தேதி வரை நடைபெற்ற சர்வதேச அறிவியல் கண்காட்சியில் காட்சிபடுத்தியிருந்தார். இந்த கண்டுபிடிப்புக்காக ஏஞ்சலாவுக்கு தங்கப்பதக்கம் வழக்கப்பட்டது.
மாணவி ஏஞ்சலா உருவாக்கியுள்ள தீயணைப்பு கருவியானது தண்ணீர் அல்லது கெமிக்கல் எதையும் பயன்படுத்தாமல், வெறும் ஒலி அலைகளை(Sound waves) மட்டுமே பயன்படுத்தி தீயை அணைத்துவிடுகிறது. இந்த கருவியில் ஒரு 12 வோல்ட் பேட்டரி, அதிர்வெண் ஜெனரேட்டர்(Frequency Generator), ஸ்பீக்கர், ஆம்ப்ளிபையர்(Amplifier) உள்ளிட்ட பாகங்கள் உள்ளன.
இதில் இருக்கும் அதிர்வெண் ஜெனரேட்டர், ஒரு வினாடிக்கு 30 டிஜிட்டல் அலைகளை(Pulses) உருவாக்குகிறது. பின்னர் அது ஒலி அலைகளாக மாற்றப்பட்டு, வட்ட வடிவ குழாயில் இருந்து அதிக வேகத்துடன் வெளியேற்றப்படுகிறது. அந்த ஒலி அலைகள் சிறிய வளையங்களாக(Vortex Rings) உருமாறுகின்றன. அவை தீப்பற்றி எரியும் இடத்தில் இருந்து ஆக்சிஜனை வெளியேற்றி தீயை அணைக்க உதவுகின்றன.
இந்த கண்டுபிடிப்பு ஏற்கனவே அமெரிக்க பாதுகாப்பு மேம்பட்ட ஆராய்ச்சி திட்டங்கள் நிறுவனம்(DARPA) உருவாக்கிய ஒரு பரிசோதனை கருவியில் செயல்பாட்டில் உள்ளதாக ஏஞ்சலா கூறுகிறார். அந்த பரிசோதனைக் கருவியின் அடிப்படையில் தனது தீயணைப்பு கருவியை வடிவமைத்ததாக ஏஞ்சலா ஹெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.
இந்த கருவியை உருவாக்க ஓராண்டு ஆனதாக குறிப்பிட்டுள்ள ஏஞ்சலா, தனது ஆலோசகரும், மாமாவுமான ஜோஸ் ஆர்தரோ தனக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்து வந்தார் என்று தெரிவித்துள்ளார். ஏஞ்சலாவின் கண்டுபிடிப்புக்கு மெக்சிகோவில் மாகாண மற்றும் தேசிய அளவில் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.