லூலூ நாய் 
உலக செய்திகள்

பனிச்சரிவில் சிக்கி 50 மணி நேரம் உயிருக்குப் போராடிய நாய்: அலாஸ்காவில் நடந்த அதிசயம்!

50 மணி நேரம் உறைபனியில் போராடி உயிர் பிழைத்த லூலூவின் இந்த சாதனை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள பனிமலையில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி, சுமார் 50 மணி நேரம் தனியாகப் போராடிய நாய் ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த நெகிழ்ச்சியான சம்பவம் உலகளவில் பலரது கவனத்தைப் ஈர்த்துள்ளது.

மலையேற்றப் பயணம்

அமெரிக்காவின் அலாஸ்காவின் சுகாச் மாநிலப் பூங்காவில் உள்ள 'பெப்பர் பீக்' மலைப்பகுதியில், கடந்த 10-ந்தேதி அன்று பிரையன், லாரன் படாவர் ஆகிய 2 மலையேற்ற வீரர்கள் தங்களின் 4 வயது கலப்பின நாயான 'லூலூ' உடன் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் அந்த மலையேற்ற வீரர்கள் இருவரும் சுமார் 500 அடி கீழே அடித்துச் செல்லப்பட்டு படுகாயமடைந்தனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர்.

50 மணி நேரப் போராட்டம்

பனிச்சரிவின் போது அவர்களின் செல்லப் பிராணியான லூலூ, பனிமலையின் உறைபனி குளிரில் தனியாக மாட்டிக்கொண்டது. மைனஸ் டிகிரி குளிரிலும், எந்தவித உணவோ பாதுகாப்போ இன்றி அந்த நாய் சுமார் 50 மணி நேரம் பனிப்பொழிவுக்கு இடையே தனியாக சுற்றித் திரிந்துள்ளது.

மீட்புக்கு உதவிய ஆப்பிள் ஏர்டேக்

காணாமல் போன லூலூவைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது நாயின் கழுத்துப்பட்டையில் பொருத்தப்பட்டிருந்த 'ஆப்பிள் ஏர்டேக்' என்ற சிறிய டிராக்கிங் கருவி மீட்புக் குழுவினருக்கு பெரிதும் உதவியது. பனிமலையின் கடுமையான வானிலையையும் மீறி, அந்த ஏர்டேக் அனுப்பிய சிக்னலை வைத்து மீட்புக் குழுவினர் லூலூ இருக்கும் இடத்தை துல்லியமாகக் கண்டறிந்தனர். இதையடுத்து கடந்த 12-ந்தேதி அன்று அந்த லூலூ நாய் மீட்புக் குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டது.

லூலூவின் நிலை

மீட்கப்பட்ட லூலூவின் கால் விரல் மற்றும் பற்களில் சிறிய காயங்கள் இருந்தபோதிலும், அது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 50 மணி நேரம் உறைபனியில் போராடி உயிர் பிழைத்த லூலூவின் இந்த சாதனை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT