விமானம் 
உலக செய்திகள்

பைலட் இல்லாமல் பறந்த விமானம்... உலகையே திரும்பி பார்க்க வைத்த சீனா

தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் அமர்ந்தபடியே, ஒரே ஒரு குழுவினரால் ஒரே நேரத்தில் 6 முதல் 7 விமானங்களை கண்காணித்து இயக்க முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பம்சம்.

பெய்ஜிங்,

விமான போக்குவரத்து துறையில் சீனா அடுத்தடுத்து புதிய மைல்கற்களை எட்டி வருகிறது. அந்த வகையில், மிகப்பெரிய ஆளில்லா சரக்கு விமானத்தை வெற்றிகரமாக சோதனை செய்து, உலக நாடுகளை சீனா வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

டபிள்யூ 5000

சீனாவின் 'ஏர் ஒயிட் வேல்' நிறுவனம் உருவாக்கியுள்ள டபிள்யூ 5000 ('W5000') என்ற இந்த அதிநவீன ஆளில்லா சரக்கு விமானத்தின் முதல் சோதனை ஓட்டம், வடக்கு சீனாவின் உள் மங்கோலியா பகுதியில் உள்ள ஆர்டோஸ் விமான நிலையத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. சுமார் 30 நிமிடங்கள் வானில் வட்டமடித்து, இந்த விமானம் தனது திறனை நிரூபித்துள்ளது.

40 சதவீதம் வரை சேமிப்பு

பைலட்டே இல்லாமல், சுமார் 5,000 கிலோ (5 டன்) எடையுள்ள சரக்குகளை சுமந்துகொண்டு, 2,600 கிலோமீட்டர் தூரம் வரை தொடர்ந்து பறக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. விமானிகள் மற்றும் காக்பிட் அறை இல்லாததால் விமானத்தின் எடை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சாதாரண சரக்கு விமானங்களை விட எரிபொருள் மற்றும் போக்குவரத்து செலவில் 40 முதல் 60 சதவீதம் வரை சேமிக்க முடியும் என கூறப்படுகிறது.

ஒரே நேரத்தில் 7 விமானங்கள்

தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் அமர்ந்தபடியே, ஒரே ஒரு குழுவினரால் ஒரே நேரத்தில் 6 முதல் 7 விமானங்களை கண்காணித்து இயக்க முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பம்சம். முழுக்க முழுக்க சீன தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்த விமானத்திற்கு, இப்போதே 800-க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் குவிந்துள்ளன.

வரும் 2027-ஆம் ஆண்டின் இறுதியில் இந்த விமானம் முழு அளவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரக்கு போக்குவரத்துத் துறையில் இது ஒரு மிகப்பெரிய புரட்சியாக பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT