குடும்பத்தினருடன் இணைந்த லீ ஸெக்கிங் 
உலக செய்திகள்

DNA பரிசோதனை மூலம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைந்த மாற்றுத்திறனாளி

லீ ஸெக்கிங்கிற்கு சிறுவயதிலிருந்தே தனது பெயரை தலைகீழாக எழுதும் ஒரு தனித்துவமான பழக்கம் இருந்தது.

பெய்ஜிங்,

சீனாவில் 35 வருடங்களுக்கு முன்பு தொலைந்த மாற்றுத்திறனாளி வாலிபர் டிஎன்ஏ பரிசோதனை மூலம் குடும்பத்துடன் இணைந்தார்.

ரயில் பயணமும் பிரிவும்

சீனாவின் ஹெநான் மாகாணத்தைச் சேர்ந்த சிறுவன் லீ ஸெக்கிங் (வயது 4) . இந்த சிறுவன் வாய் பேசவும், காது கேட்கவும் முடியாத மாற்றுத்திறனாளி. லீ ஸெக்கிங் கடந்த 1991 ஆம் ஆண்டு தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது விளையாட்டாக அங்கு நின்று கொண்டிருந்த ஒரு ரெயிலில் ஏறியுள்ளார்.

ரெயிலின் உள்ளே சென்று ஒரு இருக்கைக்கு அடியில் ஒழிந்து கொண்டு படுத்த சிறுவன் அங்கேயே அயர்ந்து தூங்கிவிட்டான். பின்னர் அந்த சிறுவன் கண் விழித்துப் பார்த்தபோது வேறு புதிய இடத்திற்குச் சென்றிருந்தான்.

லீ வாய் பேசவும், காது கேட்கவும் முடியாத மாற்றுத்திறனாளி என்பதால், அவனால் தனது ஊர் மற்றும் பெற்றோர் விபரங்களை யாரிடமும் கூற முடியவில்லை. இதனைத் தொடர்ந்து ஷென்சென் நகருக்குச் சென்ற அவனை, அங்குள்ள ஒரு உணவக உரிமையாளர் தத்தெடுத்து வளர்த்துள்ளார் .

காப்பாற்றிய சிறுவயது பழக்கம்

லீ ஸெக்கிங்கிற்கு சிறுவயதிலிருந்தே தனது பெயரை தலைகீழாக எழுதும் ஒரு தனித்துவமான பழக்கம் இருந்தது. 35 ஆண்டுகள் கழித்து, தனது குடும்பத்தைத் தேடும் முயற்சியாக இணையத்தில் ஒரு தகவலைப் பகிர்ந்திருந்தார். அதே நேரத்தில் அவரது குடும்பத்தினரும் அவரை பல வருடங்களாகத் தேடி வந்தனர்.

இணையத்தில் லீ பதிவிட்ட செய்தியையும், அவர் பெயரை தலைகீழாக எழுதியிருந்த விசித்திரமான பழக்கத்தையும் அவரது சகோதரர் தற்செயலாகக் கவனித்து, அது தனது தம்பிதான் என்பதை அடையாளம் கண்டுகொண்டார்.

கண்ணீர் மல்கிய சந்திப்பு

உடனடியாக காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர் லீ ஸெக்கிங் என்பது 100% உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஜூன் 11 அன்று ஷென்சென் நகரில், தனது தந்தை, சகோதரர் மற்றும் சகோதரியை லீ நேரில் சந்தித்தார்.

காணாமல் போய் 35 வருடங்களுக்குப் பிறகு மகன் நேரில் வந்ததைக் கண்டு அவரது தந்தை கண்ணீர் விட்டு அழுத காட்சி அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது .

SCROLL FOR NEXT