மினிபஸ் மீது ரெயில் மோதல் 
உலக செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயன்ற மினிபஸ் மீது ரெயில் மோதி பயங்கர தீ விபத்து - ஓட்டுநர் உயிரிழப்பு

கண்ணிமைக்கும் நேரத்தில் மினிபஸ் மீது அதிவேகத்தில் வந்த ரெயில் பயங்கரமாக மோதியது.

ஜகார்த்தா,

இந்தோனேசியாவில் ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற மினிபஸ் மீது பயணிகள் ரெயில் பயங்கரமாக மோதியதில், இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சியாந்தர் எக்ஸ்பிரஸ்

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள சியாந்தர் நகரிலிருந்து, மேடான் நோக்கி 'சியாந்தர் எக்ஸ்பிரஸ்' பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற ரெயில்வே கடவுப்பாதையை மினிபஸ் கடக்க முயன்றது.

மினிபஸ்-ரெயில் மோதல்

கண்ணிமைக்கும் நேரத்தில் மினிபஸ் மீது அதிவேகத்தில் வந்த ரெயில் பயங்கரமாக மோதியது. இந்த மோதலின் வேகத்தால் தீப்பொறி ஏற்பட்டு, மினிபஸ் மற்றும் ரெயிலின் முன்பகுதி என்ஜின் ஆகிய இரண்டும் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிய தொடங்கின.

மினிபஸ் ஓட்டுநர் உயிரிழப்பு

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த கோர விபத்தில், மினிபஸ் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ரெயிலில் பணியில் இருந்த 3 ஊழியர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

வீடியோ காட்சிகள்

அதிர்ஷ்டவசமாக, ரெயிலில் பயணம் செய்த 264 பயணிகளும் எந்தவித காயமுமின்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக இந்தோனேசிய ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது, தீப்பிடித்து எரியும் ரயில் மற்றும் மினிபஸ்சின் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

SCROLL FOR NEXT