டெல் அவிவ்
விமான தகர்ப்பு சதியை முறியடித்த சம்பவத்தில், இந்திய விமானியை வணங்குகிறேன் என இஸ்ரேல் பிரதமர் நெகிழ்ச்சியுடன் சமூக ஊடகத்தில் பதிவிட்டு உள்ளார்.
துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி புறப்பட்ட எப்.இசட்.1073 என்ற எண் கொண்ட பிளைதுபாய் விமானம் சென்றபோது நடுவானில் விமானிகள் இடையே கடும் சண்டை நடந்தது. ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி திடீரென எழுந்து, கேப்டனாக இருந்த இந்திய விமானி ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்தி கடுமையாக தாக்கினார்.
எனினும், கத்திக்குத்து காயங்களுடன் இருந்தபோதும், துணிச்சலாக போராடிய மச்சார், விமானியின் கதவை திறந்து விட்டார். உடனே உள்ளே வந்த சக பயணிகள், பணியாளர்கள் சக விமானியை தடுத்து, கயிற்றை கொண்டு கட்டிப்போட்டனர். இதனால், விமானத்தை தகர்க்கும் சதி முறியடிக்கப்பட்டது. 174 பயணிகள் உயிர்தப்பினர்.
இந்த நிலையில், பாதுகாப்பாக இஸ்ரேலுக்கு திரும்பிய பயணிகளை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சந்தித்து பேசினார். அப்போது அவர், பெரிய பேரிடரை தவிர்க்கும் வகையில் மச்சார், பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் செயல்பட்டு உள்ளனர் என கூறினார்.
துணிச்சலாக செயல்பட்ட மச்சாரை தனிப்பட்ட முறையில் பாராட்டினார். இதுபற்றி அவர் வெளியிட்ட செய்தியில், அசாத்திய துணிச்சலுடன் செயல்பட்ட இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு என்னுடைய வணக்கங்கள். கத்தியால் குத்தப்பட்டு படுகாயம் அடைந்தபோதும், அவர் எதிர்த்து போராடியுள்ளார்.
விமானத்தில் தாக்குதல் நடத்தியவரை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் உள்ளே வருவதற்கு ஏதுவாக, விமானி அறையை திறந்து விட்டிருக்கிறார். நடுவானில் ஏற்பட இருந்த பேரிடரை தடுத்திருக்கிறார் என்று தெரிவித்து உள்ளார்.
இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் பிற நாட்டினர் உள்பட 174 பேரின் உயிரை காப்பாற்றியிருக்கிறார். அவர் விரைந்து, முழுமையாக குணமடைந்து திரும்ப இறைவனை வேண்டி கொள்கிறேன். அவர் உண்மையான ஒரு நாயகன் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.