வென் சாங்  
உலக செய்திகள்

ஆடைகளை வாடகைக்கு விட்டு மாதம் ரூ.5 லட்சம் சம்பாதிக்கும் பெண்!

குறைந்த நேர உழைப்பில் அதிக வருமானம் தரும் இந்த தொழிலை மேலும் விரிவுபடுத்த வென் சாங் திட்டமிட்டுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வசிக்கும் முன்னாள் நிதித்துறை அதிகாரி ஒருவர், தனது ஆடைகளை ஆன்லைனில் வாடகைக்கு விடுவதன் மூலம் மாதம் சுமார் ரூ.4.6 லட்சம் ($5,000) வருமானம் ஈட்டி வருகிறார்.

நிதித்துறை வேலையிலிருந்து விலகல்

அமெரிக்காவின் நிதித் துறையில் சுமார் 7 ஆண்டுகள் வென் சாங் (35 வயது) பணியாற்றினார். இவர் அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் அன்றாடப் பணிகளில் ஏற்பட்ட சலிப்பு காரணமாக, அந்த உயர்மட்ட வேலையை விட்டு விலக முடிவு செய்தார். பின்னர் பாஸ்டன் நகருக்கு குடிபெயர்ந்த அவர், வாரத்தில் 2 நாட்கள் மட்டும் தனியார் சமையல்காரராக பணியாற்றி வருகிறார்.

ஆடை வாடகைத் தொழிலின் தொடக்கம்

இதையடுத்து கடந்த 2025-ம் ஆண்டு மே மாதம் ஆடைகளை வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டுவது குறித்த ஒரு கட்டுரையை வென் சாங் படித்தார். அதனால் ஈர்க்கப்பட்ட அவர், பிக்கில் என்ற ஆன்லைன் வாடகை செயலியில் தனது சொந்த அலமாரியில் இருந்த ஆடைகளை பட்டியலிடத் தொடங்கினார். ஆரம்பத்தில் சிறிய அளவில் தொடங்கிய இந்த முயற்சி, குறுகிய காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்றது.

மாதம் ரூ.4.6 லட்சம் வருமானம்

தொடர்ச்சியான தேவையைக் கண்டறிந்த வென் சாங், வாடிக்கையாளர்களுக்குப் பிடித்தமான ஆடைகளின் பல நகல்களை வாங்கி தனது சேகரிப்பை விரிவுபடுத்தினார். தற்போது இவரிடம் சுமார் 460 வாடகை ஆடைகள் உள்ளன. மற்ற பெரிய நகரங்களில் உள்ள வாடகைக் கட்டணங்களை விட 20% முதல் 30% வரை குறைவான விலையில் ஆடைகளை வழங்குகிறார். கடந்த ஏப்ரல் 2026-க்குள் மாதம் சுமார் $5,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4.6 லட்சத்திற்கும் அதிகமாக ) நிலையான வருமானம் ஈட்டும் நிலைக்கு உயர்ந்துள்ளார்.

அடுத்தகட்டத் திட்டம்

குறைந்த நேர உழைப்பில் அதிக வருமானம் தரும் இந்த தொழிலை மேலும் விரிவுபடுத்த வென் சாங் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக, பாஸ்டன் நகரில் ஆடைகளை வாடகைக்கு விடுவதற்கெனத் தனியாக ஒரு பிரத்யேக ஷோரூம் தொடங்குவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

SCROLL FOR NEXT