உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடிப்பில் 8 பேர் பலி; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கத்தார் தலைநகர் தோகாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

4 மாதங்களுக்கும் மேலாக நடந்து வரும் இந்த பேச்சுவார்த்தையில் இதுவரை எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனால் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள ஹெரட் மாகாணத்தின் தலைநகர் ஹெரட்டில் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வெடிக்க செய்தனர். வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது. கரும்புகை மண்டலம் உருவானது.இந்த குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரும், பெண்கள் சிறுவர்கள் உள்பட அப்பாவி பொதுமக்கள் 7 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.மேலும் 50-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். மேலும் இந்த குண்டுவெடிப்பில் 14 வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்து தரைமட்டமாகின.

படுகாயம் அடைந்த அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இதனிடையே இந்த தாக்குதல் நடந்த சில மணி நேரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக கூறி கடும் கண்டனம் தெரிவித்தது.

SCROLL FOR NEXT