வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனக்கு நோபல் அமைதிப் பரிசு கிடைக்காதது குறித்து அவ்வப்போது அதிருப்தியை தெரிவித்து வரும் நிலையில், தற்போது புலிட்சர் விருது குறித்தும் பேசியுள்ளார்
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் நடந்த குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசிய டிரம்ப்,
எனக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை. புலிட்சர் பரிசும் கிடைக்கவில்லை. எழுத்துப் பணிக்காக எனக்கும் புலிட்சர் பரிசு கிடைத்திருக்க வேண்டும். ரஷியா தொடர்பாகத் துல்லியமான, சிறப்பான செய்திகளை எழுதியதாகக் கூறி புலிட்சர் பரிசு பெற்றவர்களுக்கு அந்த விருது வழங்கப்பட்டிருக்கக் கூடாது. அவர்கள் அனைவரும் தவறாக எழுதியுள்ளனர் என்றார்.
புலிட்சர் விருது என்பது இதழியல், கலை மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்த படைப்புகளை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் அமெரிக்காவில் வழங்கப்படும் உயரிய விருதாகும். கொலம்பியா பல்கலை விருதுக்கான தேர்வை நிர்வகித்து வருகிறது. டிரம்ப் தனது பெயரில் வர்த்தகம், அரசியல் மற்றும் வியூகங்கள் தொடர்பாகச் சுமார் 20 புத்தகங்களை வெளியிட்டுள்ளார். முதல் புத்தகமான தி ஆர்ட் ஆப் தி டீல் 1987ல் வெளியானது.
தான் எழுதிய புத்தகங்களுக்காகவும் தனது எழுத்து நடைக்காகவும் தனக்குப் புலிட்சர் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும்” என அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியிருப்பது விவாதமாகி உள்ளது.