செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. தகவல் தொழில் நுட்ப பெரும் புரட்சியையே ஏஐ ஏற்படுத்தியுள்ள நிலையில், மனிதர்களின் பல வேலைகளுக்கு ஏஐ ஆப்பு அடித்துவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். ஐடிதுறை, பத்திரிகை, என பலதுறைகளிலும் வேலை இழப்புகள் ஏற்படும் என்று எச்சரித்து வருகிறார்கள். ஏஐ தாக்கம் காரணமாக அமேசான், ஆரக்கிள் என உலகின் முன்னணி நிறுவனங்களும் ஆட்குறைப்பு பணியிலும் ஈடுபட்டு வருவதால் ஐடி துறை ஊழியர்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஐடி ஊழியர்கள் நிம்மதி அடையும் விதமாக ஒரு தகவலை இன்போசிஸ் நிறுவனர் கூறியுள்ளார்.
இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி கூறுகையில், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) வேலைவாய்ப்புகளைப் பறிக்காது, மாறாக அது புதிய வேலைகளை உருவாக்கும் என்றார். இதுகுறித்து அவர், "1980-களில் கணினிகள் வந்தபோது வேலை போகும் என்று பயந்தார்கள். ஆனால் கணினிகளால்தான் கோடிக்கணக்கான வேலைகள் உருவாயின. அதேபோல் ஏ.ஐ.-யும் ஒரு கருவியாகச் செயல்படும். ஏ.ஐ.யால் மனிதனின் கற்பனைத் திறனையும், முடிவெடுக்கும் ஆற்றலையும் மிஞ்ச முடியாது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு அதைச் சரியாகப் பயன்படுத்துபவர்களுக்கு அதிக வாய்ப்புகள் காத்திருக்கின்றன." என்றார்.