கோப்புப்படம் 
உலக செய்திகள்

ஏர் கனடா நிறுவனத்தில் போலி உரிமத்துடன் 17 ஆண்டுகள் கேப்டனாக பணியாற்றிய பைலட் அதிரடி கைது

ஏர் கனடா நிறுவனத்தில் போலி உரிமத்துடன் 17 ஆண்டுகள் கேப்டனாக பணியாற்றிய பைலட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஒட்டாவா,

கனடாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் கனடாவில், போலி உரிம ஆவணங்களைக் காட்டி ஏமாற்றி, கடந்த 17 ஆண்டுகளாகப் பயணிகள் விமானங்களை இயக்கி வந்த ஜெப்ரி வால் என்ற 59 வயது முன்னாள் கேப்டனை கனடா போலீசார் கைது செய்துள்ளனர்.

புராஜெக்ட் இகாரஸ் என்ற பெயரில் நடத்தப்பட்ட தீவிர மோசடிப் புலனாய்வு விசாரணையின் முடிவில் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2009 முதல் 2025-ல் அவர் ஓய்வு பெறும் வரை, சுமார் 17 ஆண்டுகள் கேப்டன் பணியில், போயிங் 767, 777 மற்றும் 787 ஆகிய மாபெரும் அதிநவீனப் பயணிகள் விமானங்கள் மூலம் சுமார் 900-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேசப் பயணங்களை பல்லாயிரக்கணக்கான பயணிகளுடன் அவர் வெற்றிகரமாக இயக்கியுள்ளார்.

இதன் மூலம் சுமார் 2.9 மில்லியன் கனடிய டாலர்களை (சுமார் ரூ.18 கோடி) ஊதியமாகப் பெற்றுள்ளார். அத்துடன் ஏர் கனடா பைலட்கள் சங்கத்தின் தலைவராகவும் அவர் பொறுப்பு வகித்துள்ளார். கடந்த 2025 மார்ச் மாதம் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற வழக்கமான தகுதி மதிப்பீட்டு சோதனையின்போது, இவரது ஆவணங்களில் சில முரண்பாடுகள் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதற்கிடையே, தன்னிடம் இருந்த ஒரிஜினல் உரிமங்கள் திருடப்பட்டுவிட்டதாக ஜெப்ரி வால் காவல்துறையில் ஒரு போலிப் புகாரை அளித்து தப்பிக்க முயன்றுள்ளார். எனினும், தீவிர விசாரணையில் அவரது வீடு சோதனையிடப்பட்டு போலி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜூன் 1-ம் தேதி கைது செய்யப்பட்ட அவர் மீது தற்போது 5,000 டாலருக்கும் அதிகமான மோசடி, போலி ஆவணங்களைப் பயன்படுத்துதல் மற்றும் பொதுமக்களைத் திசைதிருப்புதல் உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஜெப்ரி வால் விமானங்களை இயக்குவதற்கு தகுதியற்ற நபர் அல்ல. அவர் வர்த்தக விமானங்களை இயக்குவதற்கு சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் 2009-ல் கேப்டனாகப் பதவி உயர்வு பெற்றபோது தேவைப்பட்ட உயர்நிலை உரிமத்தை அவர் ஒருபோதும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.