உலக செய்திகள்

எபோலா அச்சுறுத்தல்: பிரான்சில் இருந்து அமெரிக்கா புறப்பட்ட விமானம் கனடாவில் தரையிறக்கம்

விமானம் கனடாவின் மாண்ட்ரியல் நகரில் தரையிறங்கியது.

டொரோண்டோ,

மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் தீவிரமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும். இந்த வைரஸ் காங்கோவில் வேகமாக பரவி வரும் நிலையில் அந்நாட்டில் இதுவரை 140க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

எபோலா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் காங்கோ உள்பட சில ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காங்கோ போன்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழையவேண்டுமென்றால் வாஷிங்டன் விமான நிலையம் வழியாகவே அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருந்து அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திற்கு இன்று ஏர் பிரான்ஸ் விமானம் புறப்பட்டது. விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். அந்த விமானத்தில் காங்கோ நாட்டை சேர்ந்த பயணியும் இருந்துள்ளார். காங்கோவை சேர்ந்தவர்கள், அமெரிக்க குடியுரிமை பெற்ற காங்கோ நாட்டினர் வாஷிங்டன் விமான நிலையம் வழியாகவே அமெரிக்காவுக்குள் நுழைய முடியும் என்ற விதி உள்ளது. இதனால், ஏர் பிரான்ஸ் விமானம் மிச்சிகன் மாகாணத்தில் தரையிறக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, ஏர் பிரான்ஸ் விமானம் கனடாவுக்கு திருப்பி விடப்பட்டது. விமானம் கனடாவின் மாண்ட்ரியல் நகரில் தரையிறங்கியது.

விமானம் தரையிறங்கியப்பின் காங்கோ நாட்டின் பயணியிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், அந்த பயணி மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அந்த பயணியை தவிர பிற பயணிகள் அனைவரும் அதே விமானத்தில் அமெரிக்காவின் மிச்சிகனுக்கு புறப்பட்டு சென்றனர்.