அமெரிக்காவில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட தகவல் தொடர்பு கோளாறு காரணமாக விமான சேவை முடங்கியுள்ளது. அமெரிக்காவில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பல ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களை இணைக்கும் தகவல் தொடர்பு அமைப்பில் ஏற்பட்ட பாதிப்பே இதற்கு காரணம் எனக்கூறப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்க போக்குவரத்துத்துறை மந்திரி சீன் டபி கூறுகையில், ’அனைத்து விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களிலும் தகவல் தொடர்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய தொழில்நுட்ப வல்லுநர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்’ என்றார்.
ஏற்கனவே வானில் பறந்து கொண்டிருந்த விமானங்கள் அதாவது அமெரிக்காவுக்கு வந்து கொண்டிருந்த விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்பட்டன. ஆனால், அமெரிக்காவில் இருந்து விமானங்கள் புறப்பட தடை விதிக்கப்பட்டது. சர்வதேச விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு குறித்து தனித்தனியாக முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த திடீர் நடவடிக்கையால் சுமார் 7 ஆயிரம் விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டதாக விமானப் போக்குவரத்து கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2008- ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, நாடு முழுவதும் விமானங்கள் புறப்பட தடை விதிக்கப்பட்டது . அதன்பிறகு 2023-ம் ஆண்டு ஜனவரியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவை நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் நாடு தழுவிய அளவில் விமானங்கள் புறப்பட தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் இருந்து கிளம்ப வேண்டிய விமானங்கள் மொத்தமாக நிறுத்தப்பட்டதால் சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.