நியூ ஆர்லியன்ஸ்
அமெரிக்காவில் 2 கப்பல்கள் மோதி கொண்டதில் 32 பேர் காயம் அடைந்தனர்.
அமெரிக்காவில் நியூ ஆர்லியன்ஸ் நகரத்திற்கு உட்பட்ட பகுதியில், மிஸ்ஸிஸிப்பி ஆற்றில், அமெரிக்கன் ஹெரிடேஜ் என்ற பெயரிடப்பட்ட சொகுசு கப்பல் சென்று கொண்டிருந்தது. சொகுசு கப்பலில் 129 பயணிகள் மற்றும் கப்பல் ஊழியர்கள் இருந்தனர்.
அந்த கப்பல் லூசியானா மற்றும் மிஸ்ஸிஸிப்பி உள்ளிட்ட பகுதிகளில் நின்று சென்றது. அப்போது அதன் மீது அட்லாண்டிக் ஆஸ்பால்ட் என்ற சரக்கு கப்பல் ஒன்று மோதியது. 8 நாட்கள் சொகுசு பயணம் முடிந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சொகுசு கப்பல் நீரில் சரிந்தது. அதில் சிக்கிய பயணிகள் உதவி கேட்டு அலறினர். அவர்களை மீட்கும் பணிக்காக போலீசார், படகோட்டிகள் மற்றும் பிற மீட்பு குழுவினர் உடனடியாக உதவிக்கு சென்றனர். அப்போது, ஆற்றில் படகு, கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்த சம்பவத்தில் 32 பேர் சிக்கி காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. மீட்பு பணியை சிறந்த பணி என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பாராட்டியுள்ளார்.
11 வருடம் பழமையான, 4 அடுக்குகளை கொண்ட இந்த கப்பலில் 150 பேர் வரை பயணிக்க முடியும். கண்ணாடியால் மூடப்பட்ட உணவு விடுதி, உடற்பயிற்சி மையம் மற்றும் விருந்தினர்கள் தங்க வசதியாக 3 அறைகள் உள்ளிட்ட வசதிகளை இந்த கப்பல் கொண்டுள்ளது. இந்த விபத்து மிஸ்ஸிஸிப்பியில் நடந்த ஓர் அதிசயம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.