நியூயார்க்
தெலுங்கானாவை சேர்ந்த அன்ஷுல் குஞ்சா (வயது 28) என்பவர் 4 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்துள்ளார். தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், கூடுதல் வருவாய்க்காக வார இறுதி நாட்களில் பகுதிநேர வேலையாக பீட்சா டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு பீட்சா டெலிவரி செய்யும்படி அவருக்கு ஆர்டர் வந்துள்ளது. இதனால் நேற்றிரவு அவர் அந்த பகுதிக்கு சென்றார்.
ஆனால், பீட்சாவை வாங்க யாரும் வரவில்லை. அதற்கு பதிலாக மர்ம நபர் ஒருவர் அவரை தலையில் பல முறை துப்பாக்கியால் சுட்டு, தாக்கி விட்டு தப்பி விட்டார் என கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த அன்ஷுல் பலியாகி உள்ளார்.
எனினும், இது திட்டமிட்ட சதி என அவருடைய குடும்பத்தினர் குற்றச்சாட்டாக கூறினர். இந்த சம்பவத்தில் அவருடைய பொருட்கள் எதுவும் திருடப்படவில்லை. இதனால், கொலைக்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. அவருடைய சகோதரி தன்வி கூறும்போது, அவரை திட்டமிட்டு அந்த பகுதிக்கு வரவழைக்க பீட்சா ஆர்டர் செய்துள்ளனர்.
அவரை சிக்க வைக்கவும், கொலை செய்யும் ஒரே நோக்கத்துடன் இது நடந்துள்ளது. அவர்களுக்கு என்ன லாபம் என்றோ என்ன நோக்கங்கள் என்றோ எங்களுக்கு தெரியவில்லை. என்னுடைய சகோதரரை திட்டமிட்டு, வரவழைத்து கொன்று விட்டனர் என கூறியுள்ளார். உங்களுடைய குழந்தைகளை அமெரிக்காவுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் அவர் வருத்தத்துடன் கூறினார்.