வாஷிங்டன்,
அமெரிக்காவின் தேசிய பொதுக்கடன் 3,840 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அமெரிக்காவின் கருவூலத்துறை, வர்த்தகம் முடியும் நேரத்தில் நாள்தோறும் நிதி அறிக்கையை வெளியிடுவது வழக்கம். அதன்படி கடந்த 18ம் தேதி வெளியான அறிக்கையில், அமெரிக்காவின் கடன் தொகை வரலாற்றில் இல்லாதபடி அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் சி.பி.ஒ. எனப்படும், நிதி மற்றும் பொருளாதா ரம் சார்ந்த தகவல்களை வழங்கும் பட்ஜெட் அலுவலகம், 2026 நிதியாண்டு இறுதிக்குள் அமெரிக்காவின் கடன் 3,773 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என முன்பு அறிவித்து இருந்தது.
ஆனால், 8 மாதங்களிலேயே கடன் தொகை இந்திய மதிப்பில் 3,840 லட்சம் கோடி ரூபாய்க்கு (40 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்) மேல் உயர்ந்து உள்ளது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழல், ராணுவ செலவு, சக பாதுகாப்புக்கான நிதி அதிகரிப்பு, பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டதால் நாட்டின் கடன் மீதான வட்டித் தொகை பன்மடங்கு அதிகரித்தது போன்றவையே அமெரிக்காவின் கடன் அளவு வரலாறு காணாத வகையில் உயர்ந்ததற்கு காரணம் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் காலத்தில் பொதுச் செலவினங்களை குறைப்பதாக உறுதியளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், அமெரிக்காவை கடனில் தள்ளிவிட்டதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.