வாஷிங்டன்,
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தைச் சேர்ந்த 'ஹோப்' என்ற பெண் கழுதை, உலகிலேயே மிக நீளமான வாலைக் கொண்ட கழுதை என்ற புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலம் பைரன் நகரில் அமைந்துள்ள ப்ராஸ்ட் பண்ணையில் கின்னஸ் சாதனை நிகழ்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 11-ம் தேதி, கால்நடை மருத்துவர் குழு மற்றும் சுயாதீன சாட்சிகள் முன்னிலையில் ஹோப்பின் வால் அதிகாரப்பூர்வமாக அளவிடப்பட்டது. அதில் வாலின் நீளம் 50.73 சென்டிமீட்டர் (19.97 அங்குலம்) இருப்பது உறுதி செய்யப்பட்டது. சுமார் 2 மாத கால ஆய்வுக்குப் பிறகு, கின்னஸ் உலக சாதனை நிறுவனம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
'அமெரிக்கன் மம்மத் ஜாக்ஸ்டாக்' இனத்தைச் சேர்ந்த ஹோப் கின்னஸ் சாதனை படைப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு, 'உலகின் மிக நீளமான காதுகளைக் கொண்ட கழுதை' என்ற சாதனையையும் ஹோப் தன்வசம் வைத்திருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் வேறொரு கழுதை அந்த சாதனையை முறியடித்த நிலையில், நீளமான வால் பிரிவில் மீண்டும் கின்னஸ் உலக சாதனை படைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு மிகவும் மெலிந்து, உடல்நலக் குறைவோடு கைவிடப்பட்ட நிலையில் இருந்த ஹோப்பை, ஹன்னா ப்ரோஸ்ட் என்பவர் மீட்டு தனது பண்ணையில் வளர்த்து வருகிறார். முறையான கவனிப்பும் அன்பும் கிடைத்ததால் ஆரோக்கியமாக வளர்ந்த ஹோப், இன்று உலகப் புகழ்பெற்ற கின்னஸ் சாதனையாளராக உருவெடுத்துள்ளது.