வாஷிங்டன்,
ஒரே வருடத்தில் திரையரங்கிற்கு சென்று அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்களைப் பார்த்ததற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம், ஹாரிஸ்பர்க் பகுதியைச் சேர்ந்த இளைஞர் கிளென்வுட் ஹோஸ்கின் ஜூனியர் (33 வயது). இவர் கடந்த ஓராண்டில் மட்டும் திரையரங்குகளில் மொத்தம் 1,207 திரைப்படங்களைப் பார்த்து இந்த புதிய கின்னஸ் சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளார்.
இதற்கு முன்னதாக, கடந்த 2023-ம் ஆண்டில் அமெரிக்காவின் சாக் சுவோப் என்பவர் திரையரங்கில் 777 திரைப்படங்களைப் பார்த்ததே உலக சாதனையாக இருந்தது. தற்போது கிளென்வுட் ஹோஸ்கின், அந்த சாதனையை விட கூடுதலாக 430 திரைப்படங்களைப் பார்த்து புதிய வரலாற்றுப் பதிவை உருவாக்கியுள்ளார்.
இந்த கின்னஸ் சாதனை அங்கீகரிக்கப்பட சில கடுமையான விதிகள் பின்பற்றப்பட்டன. திரைப்படங்கள் அனைத்தும் திரையரங்கில் மட்டுமே பார்க்கப்பட வேண்டும். திரைப்படங்கள் முழுமையாக பார்க்கப்பட வேண்டும். இடையில் இடைவேளை தவிர மற்ற நேரங்களில் வெளியேறக் கூடாது. எந்தவொரு வெளிப்புற கவனச்சிதறலும் (உதாரணமாக மொபைல் போன் பயன்படுத்துவது) இருக்கக்கூடாது.
திரைப்படங்கள் மீது கொண்ட தீராத காதலால் இந்த முயற்சியில் இறங்கியதாகக் கூறும் கிளென்வுட், இதற்காக தனது உள்ளூர் திரையரங்கிற்கு தொடர்ந்து சென்று திரைப்படங்களைக் கண்டுள்ளார். இதையடுத்து கின்னஸ் உலக சாதனை நிறுவனம் கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி அன்று அவரது சாதனையை உறுதி செய்தது. மேலும் அவரது இந்த அசாத்திய சாதனையைப் பாராட்டி, அவருக்கு உலக கின்னஸ் சாதனையின் அதிகாரப்பூர்வ சான்றிதழை வழங்கி கவுரவித்துள்ளது. ஓராண்டில் 1,207 படங்கள் என்ற இந்த விசித்திரமான சாதனை சமூக வலைதளங்களில் உலக அளவில் பெரும் வியப்பை ஏற்படுத்தி வருகிறது.