உலக செய்திகள்

ஈரானுடன் பதற்றத்திற்கு இடையே... மத்திய கிழக்கு பகுதிகளுக்கு படைகளை மாற்றி வரும் அமெரிக்கா

ஈரானில் இருந்து சற்று தொலைவில் அமெரிக்காவின் 2 விமானந்தாங்கி கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

வாஷிங்டன் டி.சி.

ஈரானுடன் பதற்றம் மற்றும் நேரடி ராணுவ மோதல் ஏற்பட கூடிய சாத்தியம் உள்ள சூழலில், மத்திய கிழக்கு பகுதிகளில் படைகளை அமெரிக்கா இடம் மாற்றி வருகிறது. எந்த திட்டம் என முன்னறிவிக்கப்படாமல், ஆனால் படையினரை பல்வேறு பகுதிகளில் நிலை நிறுத்தி வருகிறது.

இதன்படி, கத்தார் நாட்டின் அல் உதீத் படை தளத்தில் இருந்த 100-க்கும் மேற்பட்ட வீரர்களை இடம் மாற்றி கொண்டு சென்றுள்ளது. இதனை அமெரிக்காவின் பென்டகன் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதேபோன்று, அமெரிக்காவின் ராணுவ தளங்களுக்கான நெட்வொர்க்கில் உள்ள பஹ்ரைன், ஈராக், சிரியா, குவைத், சவுதி அரேபியா, ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளிலும் கூட ராணுவ அதிகாரிகள் மற்றும் ஆயுதங்களின் இடமாற்றம் நிகழ்ந்துள்ளது.

அவர்கள் எல்லோரும் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இது எதற்காக என்ற தகவல் தெரிய வரவில்லை. ஒருவேளை போர் மூண்டால் இந்த 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் ஈரானின் தாக்குதலுக்கு இலக்காக கூடும் என தெரிகிறது.

ஏனெனில், 2025-ம் ஆண்டு ஜூனில் கத்தாரில் அமைந்த அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஆனால், பெரிய பாதிப்பு ஏற்படுத்தும் அளவுக்கு அந்த தாக்குதலை ஈரான் நடத்தவில்லை. ஈரான் மீது நடத்தப்பட்ட அமெரிக்காவின் தாக்குதலுக்கு எச்சரிக்கை விடும் வகையிலேயே இந்த பதிலடி அமைந்தது.

ஆனால், அதன்பின்னர் ஐ.நா.வில் ஈரான் சார்பில் விடப்பட்ட எச்சரிக்கையில், அடுத்த முறை அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், பின்னர் அனைத்து அமெரிக்க தளங்கள், அமைப்புகள், கட்டிடங்கள் மீதும் கடுமையான பதிலடி தாக்குதல் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு தனது வான் பாதுகாப்பு அமைப்புகளை, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கையாக மத்திய கிழக்கு பகுதிகளுக்கு அமெரிக்கா மாற்றி உள்ளது என கூறப்படுகிறது.

அதனுடன் தாக்குதலில் இருந்து தப்பும் வகையில், ஈரானில் இருந்து சற்று தொலைவில் அமெரிக்காவின் 2 விமானந்தாங்கி கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

எனினும், தூதரக அளவிலான பேச்சுவார்த்தையில் முடிவு வராவிட்டால், டிரம்ப் அரசு ராணுவ தாக்குதல்களை தொடங்க தயாராகி வருகிறது என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் ஈரானில் தலைமை மாற்றம் தேவை என டிரம்ப் முன்பு கூறியதும் கவனிக்கத்தக்கது. எனினும், ஈரானும் பதிலடிக்கு தயாராகவே உள்ளது. அதற்கேற்ப அதன் தலைவர் காமேனி சமீபத்தில் கூட டிரம்ப்புக்கு நேரடியாகவே எச்சரிக்கை விடும் வகையில் பேசினார்.