முதலை பொம்மை  
உலக செய்திகள்

உடல்நிலை சரியில்லாத முதலை.. மீட்கச் சென்ற அதிகாரிகளுக்கு காத்திருந்த டுவிஸ்ட்...

தூரத்தில் இருந்து பார்க்கும்போது அசல் முதலை போலவே தோற்றமளித்த அந்த உருவம் சிறிதும் அசையாமல் கிடந்தது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் சுகர் லேண்ட் நகரில், உடல்நிலை சரியில்லாத முதலை ஒன்று அசையாமல் கிடப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து அங்கு விரைந்த விலங்கு நல அதிகாரிகளுக்கு, அது காற்று நிரப்பப்பட்ட நீச்சல் குள பொம்மை எனத் தெரியவந்த சம்பவம் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவசர அழைப்பும் அதிகாரிகளின் வருகையும்

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள சுகர் லேண்ட் நகரில் விலங்கு நல சேவை மையம் அமைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 12-ம் தேதி அன்று இந்த மையத்திற்கு அவசர அழைப்பு ஒன்று வந்தது. அதில் அப்பகுதியில் முதலை ஒன்று உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் கிடப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து விலங்கு நல அதிகாரி பெரெஸ் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.

பொம்மை எனத் தெரியவந்த சுவாரசியம்

தூரத்தில் இருந்து பார்க்கும்போது அசல் முதலை போலவே தோற்றமளித்த அந்த உருவம் சிறிதும் அசையாமல் கிடந்தது. அதிகாரி பெரெஸ் மிகவும் எச்சரிக்கையுடன் அருகில் சென்று ஆய்வு செய்தபோது, அது உயிருள்ள முதலை அல்ல என்பதும், காற்றடைக்கப்பட்ட நீச்சல் குள மிதவை பொம்மை என்பதும் தெரியவந்தது.

விலங்கு நலத்துறையின் விளக்கம்

இந்த சம்பவம் குறித்து சுகர் லேண்ட் விலங்கு நல சேவை மையம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்களிடமிருந்து வரும் ஒவ்வொரு தகவலையும் தாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், அப்பகுதியில் உண்மையான முதலைகள் நடமாட்டம் சாதாரணமானது என்பதால் இதுபோன்ற சோதனைகள் அவசியமானது என்றும் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT