காத்மண்டு,
பெருவெள்ளத்தால் பாதிக்கபப்ட்டுள்ள நேபாளத்துக்கு அடுத்த பேராபத்து காத்திருப்பதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
காட்டாற்று வெள்ளம்
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் பெரும் பேரழிவை உண்டாக்கி இருக்கிறது.
திபெத்தின் இமயமலை பகுதியில் உருவாகும் லேண்டே கோலா ஆறு, நேபாளம் - திபெத் எல்லை பகுதி வழியாக பாய்ந்து நேபாளத்தில் உள்ள ரசுவாகடி பகுதியை அடைகிறது. அதன்பின் சிறு ஆடைகளுடன் இணைந்து ரசுவாகடி பகுதியில் போடே கோஷி ஆறாக ஓடுகிறது.
இதற்கிடையே நேற்று இமயமலை பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக லெண்டே கோலா அற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நேபாளத்தை நோக்கி அசுர வேகத்தில் பாய்ந்தது.
பாறைகள், மண் உள்ளிட்டவைகளுடன் சுமார் 30 அடி உயரத்துக்கு சீறி வந்த காட்டாற்று வெள்ளம் நேபாளத்தின் சசுவா, தாடிங் ஆகிய மாவட்டங்களில் போடே கோஷி ஆற்றில் நுழைந்தது. அந்த ஆற்றின் வழியாக திரிசூலி ஆற்றில் கலந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
பின்னர் ந்த வெள்ளம் நுவாகோட், சித்வாம், கோர்கா, தனஹி, நவல்ப்ப்ராசி கிழக்கு போன்ற மாவட்டங்களில் உள்ள ஆற்றின் வழித்தடத்தில் கட்டுக்கடங்காமல் சென்றது.
இதில் ஆறுகளின் பாதையில் இருந்த கிராமங்கள்- நகரங்களை இந்த வெள்ளம் கடுமையாக தாக்கியது. வீடுகள் பெரிய கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள், வாகனங்கள், மின் நிலையங்கள் அடித்து செல்லப்பட்டன.
காட்டாற்று வெள்ளத்தில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் சிக்கி அடித்து செல்லப்பட்டனர். இதனையடுத்து நேபாள ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை உள்ளிட்ட மீட்புக்குழுகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காட்டாற்று வெள்ளம் பாய்ந்த இடங்களில் சேறு சகதிகளுமாக காணப்படுகிறது. இதில் பலர் பிணமாக மிட்கப்பட்டனர். இதுவரை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. மேலும், வெளிநாடுகளிலிருந்து சுற்றுலா வந்தவர்கள் உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளனர்.
நேபாள ராணுவமும், மீட்புப் படைகளும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், நேபாள சுற்றுலா வாரியம் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், நேபாளத்தைச் சேர்ந்த 127 பேர், இந்தியாவைச் சேர்ந்த 178 பேர் உள்பட மொத்தம் 33 நாடுகளைச் சேர்ந்த 644 பேர் காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த 65 பேர், உக்ரைனைச் சேர்ந்த 53 பேர், மலேசியா 51, ஆஸ்திரேலியா 35, கனடா 25 பேர் மாயமாகியுள்ளனர்.
தற்போது மீட்பு - உடனடி நிவாரண பணிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் இருந்து பலர் நேபாளத்திற்கு ஆதரவையும் அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு அடுத்த பேராபத்து காத்திருப்பதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. நேபாளம் அருகே உருவாகியுள்ள புதிய ஏரி ஓரிரு நாட்களில் உடைந்து பாதிப்பை ஏற்படுத்தலாம் என சீனா தகவல் வெளியிட்டுள்ளது. நேபாளத்தின் சோசென் கோலா -புரேபு சாங்கோ நதிகள் சங்கமிக்கும் இடத்தில் ஆபத்தான தடுப்பு ஏரி உருவாகி உள்ளது.