ஆப்பிள்-1 கணினி 
உலக செய்திகள்

ஆப்பிள்-1 கணினி ரூ.10.9 கோடிக்கு ஏலம்: ஸ்டீவ் ஜாப்ஸின் கடிதம், வோஸ்னியாக்கின் கையொப்பத்துடன் உலக சாதனை!

கணினியின் முக்கிய பலகையில் ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக்கின் "Woz" என்ற அசல் கையொப்பம் இடம்பெற்றுள்ளது.

வாஷிங்டன்,

ஆப்பிள் நிறுவனத்தின் ஆரம்பகால தயாரிப்பான, மிகவும் அரிய வகை 'ஆப்பிள்-1' கணினி, நியூயார்க்கில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.10.9 கோடிக்கு ($1.148 மில்லியன்) சாதனை விலைக்கு விற்பனையாகியுள்ளது.

ஆப்பிள்-1 கணினி ஏலம்

அமெரிக்க நாட்டின் நியூயார்க்கில் உள்ள உலகப் புகழ்பெற்ற ‘போன்ஹாம்ஸ்’ ஏல நிறுவனம் நடத்திய ‘தொழில்நுட்ப மற்றும் கணினி வரலாறு’ என்ற சிறப்பு ஆன்லைன் ஏலத்தின் இறுதி நாளான 14-ந்தேதி அன்று இந்த விற்பனை நடந்துள்ளது. 1976-ஆம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஆப்பிள்-1 கணினிகளில், உலகில் 75-க்கும் குறைவான கணினிகளே எஞ்சியுள்ளன. அதில் மிகச் சிறந்த நிலையில் உள்ள, இயங்கக்கூடிய ஒரு கணினியே ஏலத்திற்கு வந்தது.

அரிய வோஸ்னியாக்கின் கையொப்பம்

இந்த கணினியின் முக்கிய பலகையில் ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக்கின் "Woz" என்ற அசல் கையொப்பம் இடம்பெற்றுள்ளது. இதுவே இந்த குறிப்பிட்ட மாடலுக்கு உலக அளவில் மிகப்பெரிய மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

ஸ்டீவ் ஜாப்ஸின் கடிதம்

கணினியுடன் சேர்த்து, கடந்த 1978-ல் ஸ்டீவ் ஜாப்ஸ் தனது சொந்தக் கையால் எழுதிய அரிய கடிதம் மற்றும் அதன் அசல் பயனர் கையேடும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இது இந்த வரலாற்று சாதனத்தின் நம்பகத்தன்மையை மேலும் உறுதிப்படுத்துகிறது.

நிமிடங்களில் நடந்த பலகோடி வியாபாரம்

இந்த அரிய கணினியைத் தங்கள் வசமாக்க உலகெங்கிலும் உள்ள சேகரிப்பாளர்கள் ஆர்வம் காட்டினர். குறிப்பாக, இந்த கணினியை வாங்குவதற்கு 2 முக்கிய ஏலதாரர்களுக்கு இடையே சுமார் 28 நிமிடங்கள் கடுமையான போட்டி நிலவியது. இறுதியாக, இது எதிர்பார்க்கப்பட்ட விலையை விட மிக அதிக விலைக்கு ரூ.10.9 கோடிக்கு ($1.148 மில்லியன்) விற்கப்பட்டு புதிய சாதனையைப் படைத்துள்ளது.

SCROLL FOR NEXT