புதுடெல்லி,
ஆப்பிள் தலைமையகத்தில் நடைபெற்ற சர்ப்ரைஸ் அண்ட் ஷைன் நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஆப்பிள் சீரிஸ் வாட்ச் மாடல்களை அறிமுகப்படுத்தி உள்ளது. சாதாரண ஸ்மார்ட் வாட்ச்கள் போல் அல்லாமல் அன்றாட வாழ்க்கையில் நமக்கு உதவும் வகையில் பல முக்கிய வசதிகளை இதில் அப்டேட் செய்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். குறிப்பாக ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 12 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா4 மாடல்களில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனிப்பட்ட உடல்நல தகவல்களை வழங்குவது போன்ற அதிநவீன வசதிகள் இடம் பெற்றுள்ளன.இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 12-ன் ஆரம்ப விலை ரூ.56 ஆயிரத்து 900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், வருகிற 18-ந்தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. 42 மி.மீ. மற்றும் 46 மி.மீ. அளவுகளில் இந்த கடிகாரம் கிடைக்கிறது. அலுமினியம், டைட்டானியம், செராமிக் ஆகிய வகைகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 12-ல் புதிய சுகாதார கண்காணிப்பு அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் மேம்படுத்தப்பட்ட ஒளியியல் மற்றும் டிடெக்டர்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் நாள் முழுவதும் 5 வினாடிகளுக்கு ஒருமுறை இதயத்துடிப்பு கண்காணிக்கப்படுகிறது. இதயத்துடிப்பு மாறுபாடு தொடர்பான அளவீடுகளும் முன்பைவிட அதிகமாக கண்காணிக்கப்படும் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.மேலும், உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிய உதவும் வகையில் பகல்நேர உடல்நல அளவீடுகளையும் பார்க்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய ‘ரெடினஸ்’ வசதி மூலம் ஒருவரின் உடற்பயிற்சி, தூக்கம், உடல்நிலை மற்றும் பயிற்சி அளவு ஆகியவற்றை ஆய்வு செய்து 0 முதல் 10 வரையிலான மதிப்பெண் வழங்கப்படுகிறது.
அதன் அடிப்படையில் ஓய்வு எடுக்க வேண்டும், வேகத்தை குறைக்க வேண்டும் அல்லது உடற்பயிற்சியை தொடரலாம் என்பது போன்ற பரிந்துரைகளும் வழங்கப்படும்.மேலும், நடை எண்ணிக்கையை துல்லியமாக கண்காணிக்கும் வகையில் புதிய இயந்திரக் கற்றல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.புதிய எஸ்11 செயலி மூலம் ஒலி சார்ந்த செயற்கை நுண்ணறிவு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஒலி அடையாளம் காணுதல், கடந்த 15 வினாடிகளில் பதிவான உரையாடலை எழுத்து வடிவில் பார்க்கும் வசதி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.மேலும், ‘சிரி’ மூலம் உரையாடல்களின் சுருக்கத்தை பெறும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதிகளில் தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.