ரியாத்
அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரானை வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து ஈரானில் நடந்து வரும் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதனை தொடர்ந்து ஈரான் நடத்தி வரும் பதிலடி தாக்குதல்களால் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அவற்றின் படை தளங்கள் அமைந்த வளைகுடா நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
மேற்காசியா மற்றும் வளைகுடா நாடுகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் பாதுகாப்பு சூழல் தொடர்பாக அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் ஒன்று ரியாத் நகரில் இன்று நடந்தது. அப்போது, ஈரானின் தொடர் தாக்குதல் பற்றி விவாதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அந்த நாடுகள் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், அஜர்பைஜான், பஹ்ரைன், எகிப்து, ஜோர்டான், குவைத், லெபனான், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, சிரியா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளின் வெளியுறவு துறை மந்திரிகள் இன்று நடந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
அதில் அனைத்து வகையான தாக்குதல்களையும் உடனடியாக ஈரான் நிறுத்த வேண்டும். பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை ஈரான் உடனே அமல்படுத்த வேண்டும். அதற்கேற்ப கட்டுப்பட்டு நடந்து கொள்ளவும் வேண்டும். அண்டை நாடுகளுக்கு எதிராக அச்சுறுத்தல்களையோ, தூண்டி விடும் செயல்களோ கூடாது என்றும் நிபந்தனையற்ற போர் நிறுத்தம் ஆகியவற்றை வலியுறுத்துகிறோம் என அறிக்கை தெரிவிக்கின்றது.
அரபு நாடுகளில் உள்ள ஈரானின் கூட்டாளியான பயங்கரவாத அமைப்புகளுக்கான ஆதரவு, நிதியுதவி மற்றும் ஆயுத உதவி ஆகியவற்றை நிறுத்த வேண்டும் என்றும் ஈரானை வலியுறுத்தி உள்ளது. இந்த நாடுகளின் நலன்களுக்கு எதிரான இந்த செயல்களை ஈரான் செய்து வருகிறது. அவற்றை நிறுத்த வேண்டும் என அறிக்கை தெரிவித்து உள்ளது.