உலக செய்திகள்

அர்ஜென்டினாவில் மத்திய வங்கி பணம் அச்சிட நிரந்தரத் தடை

'பெசோ' நாணயத்தின் மதிப்பைப் பாதுகாப்பது மட்டுமே மத்திய வங்கியின் முதன்மைப் பணியாக தற்போது மாற்றப்பட்டுள்ளது.

பியுனெஸ் அயரெஸ்,

அர்ஜென்டினாவின் 90 ஆண்டுகாலப் பணவீக்க வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. அந்நாட்டின் மத்திய வங்கி பணம் அச்சிடுவதற்கு தடை விதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

பணவீக்கமும் டாலர் மோகமும்

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் 90 ஆண்டுகளாக கடுமையான பணவீக்கம் நிலவி வருகிறது. வருமானத்துக்கு அதிகமாக அரசு செலவு செய்ததும், அந்த நிதிப் பற்றாக் குறையைச் சரிக்கட்ட நாட்டின் நாணயமான 'பெசோ'வை அதிகளவில் அச்சிடுமாறு மத்திய வங்கியைக் கட்டாயப்படுத்தியதுமே இதற்கு முக்கியக் காரணமாகும். குறிப்பாக 1970-களில் இருந்தே பணவீக்கம் உயர்ந்து வந்த நிலையில், 1989-1990 காலகட்டத்தில் அது 3 ஆயிரம் சதவீதத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது.

பெசோவின் மதிப்பு தொடர்ந்து சரிந்ததால், மக்கள் தங்கள் நாட்டுப் பணத்தில் சேமிப்பதை நிறுத்திவிட்டு, கைக்குப் பணம் வந்த உடனேயே அதை அமெரிக்க டாலராகவோ அல்லது பொருட்களாகவோ மாற்றத் தொடங்கினர். இதனால் மக்களிடையே அமெரிக்க டாலர் மீதான மோகம் அதிகரித்தது.

டிரம்ப் ஆதரவாளரின் ஆட்சி

இதனிடையே, 2023-2024 காலகட்டத்தில் பணவீக்கம் மீண்டும் கிட்டத்தட்ட 300 சதவீதமாக உயர்ந்து மக்களைக் கடுமையாகப் பாதித்தது. அப்போது 2023-ம் ஆண்டு இறுதியில் நடை பெற்ற அதிபர் தேர்தலில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் தீவிர ஆதரவாளரும், பொருளா தார நிபுணருமான ஜேவியர் மிலே களமிறங்கினார். ஆட்சிக்கு வந்தால் மத்திய வங்கியை ஒழித்துவிட்டு, அமெரிக்க டாலரை அதிகாரப்பூர்வ நாணயமாக மாற்றுவேன் என்ற அதிரடி வாக்குறுதியை அவர் முன்வைத்தார்.

தேர்தலில் வெற்றிப்பெற்று அதிபராகப் பொறுப்பேற்ற மிலேயின் 4 ஆண்டுக்கால ஆட்சி, அடுத்த ஆண்டு (2027) முடிவடைகிறது. இதனிடையே, அவரது அரசின் கடுமையான பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாக பணவீக்கம் தற்போது 33 சதவீதமாக குறைந்துள்ளது.

'பெசோ'வை அச்சிட தடை

டாலருக்கு மாறுவதற்குப் போதுமான அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததாலும், சொந்த நாணயமான 'பெசோ'வை வலுப்படுத்துவதே நீண்டகாலப் பொருளாதார நிலைத்தன்மைக்குச் சிறந்தது என்பதை உணர்ந்ததாலும், தனது முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு வரலாற்று சிறப்புமிக்க முடிவை அவர் எடுத்துள்ளார்.

இதன்படி, அரசுக்குக் கடன் வழங்கவோ, பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுகட்டவோ இனி 'பெசோ' நோட்டுகளை அச்சிடக் கூடாது என மத்திய வங்கிக்குத் தடை விதிக்கும் மசோதாவை மிலே அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. அர்ஜென்டினா நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபை 141-0 என்ற வாக்குக் கணக்கில் இதற்கு இறுதி ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய வங்கியின் பணி

நிதிப் பற்றாக்குறையைச் சரிக்கட்டப் பணம் அச்சிடும் முறையை நிரந்தரமாகத் தடுக்கும் வகையில் சட்ட விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு, 'பெசோ' நாணயத்தின் மதிப்பைப் பாதுகாப்பது மட்டுமே மத்திய வங்கியின் முதன்மைப் பணியாக தற்போது மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், அர்ஜென்டினாவின் 90 ஆண்டுகாலப் பணவீக்க வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.

SCROLL FOR NEXT