உலக செய்திகள்

"ஈரான் மீதான தாக்குதல்கள் தொடரும்" - நெதன்யாகு அறிவிப்பு

போரை நிறுத்த உலக சுகாதார அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.

வாஷிங்டன்,

மேற்காசிய மோதலின் ஒரு பகுதியாக ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியது. போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா., உலக சுகாதார அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், ஈரானின் அணு உலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் அனைத்து ராணுவ தாக்குதல்களும் 5 நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக டிரம்ப் நேற்று அறிவித்தார். இருப்பினும் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் எங்களின் எச்சரிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பணிந்துவிட்டார் என்று விமர்சனமும் செய்துள்ளது.

இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார். ஈரானுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக டிரம்ப் அறிவித்த நிலையில், ஈரானின் ஏவுகணைத் திட்டத்தையும் அணுசக்தித் திட்டத்தையும் தொடர்ந்து நசுக்குவோம் என்றும், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு மீதும் தாக்குதல்களை தொடருவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ராணுவத்தின் ஆதரவால் ஈரான் உடனான போரில் முக்கிய இலக்குகளை அடைய வாய்ப்பு உள்ளது. ஈரானின் ஏவுகணை மற்றும் அணு திட்டங்களை முறியடித்து வருகிறோம். ஹிஸ்புல்லா மீது கடுமையான தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது என நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதனால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.