உலக செய்திகள்

வளைகுடா பகுதியில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்: அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

டெஹ்ரான்,

மத்திய கிழக்கில் ஈரான்-அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கிய ராணுவ மோதல் இன்னும் முடிவுக்கு வராததால் அந்த பிராந்தியம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலக நாடுகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன.இருதரப்பும் மாறிமாறி தாக்குவதும், பின்னர் ஒன்றையொன்று குற்றம் சாட்டுவதும் வாடிக்கையாகி வருகின்றன.அந்தவகையில் ஈரானின் 3 எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா தாக்கி அழித்து இருக்கிறது.இதில் முக்கியமாக ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி-இறக்குமதி தளமாக விளங்கும் கார்க் தீவு அருகே பெர்ஷியன் வளைகுடாவில் சென்று கொண்டிருந்த அந்த நாட்டு எண்ணெய் கப்பல் ஒன்று ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது.

முற்றிலும் அழிப்பு

கரையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் இருந்த அந்த கப்பலை 4 ஏவுகணைகள் அடுத்தடுத்து தாக்கின. இதில் கப்பல் தீப்பிடித்து எரிந்து முற்றிலும் நாசமானது. எனினும் அதில் இருந்த ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இதைப்போல ஜாஸ்க் அருகே மற்றொரு கப்பலும், ஓமன் வளைகுடாவில் ஒரு கப்பலும் ஏவுகணை வீசி தகர்க்கப்பட்டு உள்ளன. இதில் முதல் 2 கப்பல்களும் எண்ணெய் ஏற்றிச்சென்றதும், 3-வது கப்பல் காலியாக சென்றதும் தெரியவந்துள்ளது.மத்திய கிழக்கில் ரோந்து பணியில் இருக்கும் அமெரிக்காவின் விமானந்தாங்கி போர்க்கப்பல் மற்றும் ஒரு நாசகாரி கப்பல் ஆகியவற்றை ஈரான் படைகள் குறி வைத்ததால் இந்த தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா கூறியுள்ளது.

பலமுறை நடந்த ஈரானின் ஆத்திரமூட்டும் தாக்குதலில் இருந்து இந்த கப்பல்கள் தப்பியதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது. மேலும் இந்த எண்ணெய் கப்பல்கள் ஈரானின் சக்திவாய்ந்த புரட்சிகர ராணுவத்துக்கு நிதியுதவி செய்ய உதவிய ஒரு நிழல் அமைப்பின் அங்கமாக இருந்தன என்றும் குற்றம் சாட்டியுள்ளது.இதேபோன்ற நிலை நீடித்தால் ஈரானின் வரையறுக்கப்பட்ட மற்றும் பாது காப்பற்ற எண்ணெய் கப்பல் அணியை முற்றிலும் அழித்து விடுவோம் என்றும் அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.

இதற்கிடையே, எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டால், இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான மற்றும் அதிக வலியை ஏற்படுத்தும் பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்காவை ஈரான் எச்சரித்துள்ளது. ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் கூறுகையில், “தாக்குதலுக்கு ஏற்ற பதிலடி என்ற நடைமுறை முடிவுக்கு வந்துவிட்டது. போரின் விதிகள் மாறிவிட்டன” என்று தெரிவித்தார். மேலும், ஈரானின் நலன்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அதற்கு முன்பைவிட வேகமாகவும், அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.

இதற்கிடையே, அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளதால், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலை உலகளாவிய எண்ணெய் விநியோகம் மற்றும் எரிபொருள் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.

SCROLL FOR NEXT