உலக செய்திகள்

கப்பல்கள் மீது தாக்குதல்: அமெரிக்கத் தூதரக அதிகாரிக்கு இந்தியா மீண்டும் சம்மன்

வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அமெரிக்கப் பிரிவு கூடுதல் செயலாளர், ஜேசன் மீக்ஸை நேரில் வரவழைத்து இந்தியாவின் கடும் கண்டனத்தை பதிவு செய்தார்

இந்திய மாலுமிகள் பயணிக்கும் வணிகக் கப்பல்களை ஓமன் கடற்பரப்பில் வைத்து அமெரிக்க ராணுவம் தாக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. கடந்த 4 நாட்களில் மூன்றாவது முறையாக நேற்று ஓமன் வளைகுடாவில் எம்டி ஜல்வீர் என்ற கப்பல் மீது இரண்டு ஏவுகணைகளை ஏவி அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. ஓமன் வளைகுடா பகுதியில் தங்கள் முற்றுகையை மீறி வரும் எந்த கப்பலாக இருந்தாலும் தாக்குவோம் என எச்சரித்திருந்த அமெரிக்கா அதன்படி இத்தாக்குதல்களை நடத்தி வருகிறது.

நேற்றைய தாக்குதலின்போது அந்த கப்பலின் எஞ்சின் அறை மீது அமெரிக்க போர் விமானம் ஏவுகணைகளை வீசியதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது. அந்த கப்பல் ஈரானில் இருந்து ஓமன் வளைகுடா வழியாக எண்ணெய் எடுத்துச் செல்ல முயன்றதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. முன்னதாக கடந்த திங்கள்கிழமை எம்டி மாரிவாகஸ் என்ற கப்பலை தாக்கிய அமெரிக்க ராணுவம், செய்வாயன்று செட்டபெல்லோ என்ற கப்பலை தாக்கியது. அக்கப்பலில் இருந்து 21 இந்திய மாலுமிகள் மீட்கப்பட்டனர். 3 பேர் பலியாகினர்.

நேரில் அழைத்து கண்டனம்

ஓமன் கடல் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமெரிக்காவின் இந்தியப் பொறுப்பு தூதர் ஜேசன் மீக்ஸை இந்தியா இன்று இரண்டாவது முறையாக நேரில் அழைத்து விளக்கம் கேட்டுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அமெரிக்கப் பிரிவு கூடுதல் செயலாளர், ஜேசன் மீக்ஸை நேரில் வரவழைத்து இந்தியாவின் கடும் கண்டனத்தை பதிவு செய்தார்.