பாங்காக்,
இந்தியாவை சேர்ந்த மோஹித்(23), ஆசிஷ்(24) மற்றும் ஹிமான்ஷு(20) ஆகிய 3 பேர் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றனர். குறைந்த செலவில் 7 நாட்கள் சுற்றுலா என்ற விளம்பரத்தைப் பார்த்து அவர்கள் தாய்லாந்திற்கு சென்றுள்ளனர். அங்கு சென்று சேர்ந்ததும், 3 இளைஞர்களையும் மர்ம நபர்கள் சிலர் பட்டயா என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் அங்குள்ள ஒரு வீட்டில் 3 பேரையும் அடைத்து வைத்தனர். மேலும் அவர்களது கை, கால்களை கட்டி, அடித்து சித்ரவதை செய்யத் தொடங்கினர். பின்னர் அவர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, கடத்தப்பட்ட 3 பேரையும் விடுவிக்க வேண்டும் என்றால் தலா ரூ.40 லட்சம் பணம் தர வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
இந்நிலையில், கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தனர். பின்னர் இந்திய தூதரகத்தின் உதவியோடு, தாய்லாந்து நாட்டின் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கடத்தப்பட்ட 3 இளைஞர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் வீடியோ கால் மூலம் கடத்தப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினரிடம் பேசியுள்ளனர். அதில் அந்த 3 இளைஞர்களும் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், உடலில் காயங்களோடு இருந்துள்ளனர்.
இந்த வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த தாய்லாந்து போலீசார், சி.சி.டி.வி. உள்ளிட்ட ஆதாரங்களின் உதவியோடு கடத்தல்காரர்களின் இருப்பிடத்தை கண்டறிந்தனர். இதையடுத்து, பட்டயா பகுதியில் உள்ள 2 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 3 இந்திய இளைஞர்களை போலீசார் அதிரடியாக மீட்டனர்.
அவர்களின் உடல்களில் கட்டையால் தாக்கப்பட்ட காயங்கள் இருந்துள்ளன. அதே சமயம், முகத்தில் ரத்தம் வழிவது போல் காட்டுவதற்காக சிவப்பு நிற சாயத்தை கடத்தல்காரர்கள் பயன்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, கடத்தலில் ஈடுபட்ட 5 நபர்கள் பாங்காக்கில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீசார் அவர்கள் 5 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 5 பேரும் இந்தியர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் வெளியிட்டுள்ள தகவலின்படி அவதார் சிங்(38), ஜக்ஜித் சிங்(38), ராம்பலக் குமார்(24), சுக்பிர் சிங்(37) மற்றும் குல்ரா சிங்(27) ஆகிய 5 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தின்படி, இந்த கடத்தல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றும், அந்த நபருடன் சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்டு திட்டங்களை வகுத்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அதே சமயம், இந்த கடத்தல் திட்டம் துபாயில் இருந்து செயல்படுத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதனிடையே, காப்பாற்றப்பட்ட 3 இந்திய இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் போலிசாரிடம் கூறுகையில், தங்களைப் போல் மற்றொரு இந்திய இளைஞரையும் அவர்கள் கடத்தி வைத்திருந்ததாகவும், அந்த இளைஞரின் குடும்பத்தினர் கடத்தல்காரர்கள் கேட்ட ரூ.30 லட்சம் பணத்தை கொடுத்துவிட்டதால், அந்த நபரை அவர்கள் விடுவித்து விட்டனர் என்றும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.