கேன்பெர்ரா
விமான தகர்ப்பு முயற்சி விவகாரம் தொடர்பாக ஓமன் விமானியிடம் ஆஸ்திரேலிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் துபாயை சுற்றி பார்த்து விட்டு, எமிரேட்ஸ் ஏர்லைன்சின் பிளைதுபாய் என்ற போயிங் ரக விமானத்தில் சொந்த நாட்டுக்கு கடந்த புதன்கிழமை புறப்பட்டனர். இதற்காக, துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இஸ்ரேல் நாட்டின் தலைநகர் டெல் அவிவில் உள்ள பென்குரியன் சர்வதேச விமான நிலையம் நோக்கி சென்ற அந்த விமானத்தில் 27 குழந்தைகள் உள்பட 174 இஸ்ரேலிய பயணிகள் மற்றும் விமான பணிப்பெண்கள் என மொத்தம் 180-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
இந்தியாவை சேர்ந்த தலைமை கேப்டன் ஸ்மித் மச்சார் மற்றும் அவருக்கு உதவியாக ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி ஒருவருடன் விமானம் புறப்பட்டது.
விமானம் சவுதி அரேபியா எல்லையை கடந்து, ஜோர்டான் வான்பரப்பில் 33 ஆயிரம் அடி உயரத்தில் அதிவேகத்தில் பறந்து கொண்டிருந்தபோது, விமானிகள் அறையான காக்பிட்டில் யாரும் எதிர்பாராத பயங்கர சம்பவம் நடந்தது.
ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி, திடீரென எழுந்து, மறைத்து வைத்திருந்த சிறு கத்தியை எடுத்து, தலைமை விமானியான கேப்டன் ஸ்மித் மச்சாரை கடுமையாக தாக்கினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த கேப்டனிடமிருந்து விமானத்தின் கட்டுப்பாட்டை பறித்த அந்த கொடூர துணை விமானி, தற்கொலை தாக்குதல் நடத்தி ஒட்டுமொத்த பயணிகளையும் கொல்ல சதி செய்திருக்கிறார்.
விமானத்தை தரையில் மோதி வெடிக்க செய்யும் திட்டத்துடன், வெறும் 30 விநாடிகளிலேயே 14 ஆயிரம் அடிக்கு செங்குத்தாக கீழ்நோக்கி இயக்கினார். இதனால், விமானத்தின் உள்ளே இருந்த 170 இஸ்ரேலிய பயணிகளும் மரண பயத்தில் அலறினர். காக்பிட் அறைக்குள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் விமான பணிப்பெண்களும் அலறினர்.
காயமடைந்த நிலையிலும் கேப்டன் ஸ்மித் மச்சர், விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர துணை விமானியுடன் கடுமையாக போராடினார். அதே நேரத்தில் விமானத்தில் இருந்து ஆபத்து சிக்னலும் அனுப்பப்பட்டது. அப்போது விமானத்தில் இருந்த இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் மற்றும் சக விமானிகள் உஷாரானார்கள்.
அப்போது கேப்டன் காக்பிட் கதவை திறக்க, உடனடியாக அவர்கள் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியவரை மடக்கிக்பிடித்து கயிற்றால் கட்டினர். பின்னர் விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் அவசரமாக பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
இந்திய விமானி மச்சார் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஓமனை சேர்ந்த துணை விமானி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக துணை விமானியிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.
துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவருக்கு அல் கொய்தா இயக்கத்தின் கொள்கைகள் வலிந்து திணிக்கப்பட்டு உள்ளன. அவரை இயக்கத்தின் பக்கம் இழுப்பதற்கான வேலைகள் நடந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக மத தலைவர்களுடன் பல கூட்டங்கள் நடந்துள்ளன.
அவர் விமானி பயிற்சி பெற்றபோது, தொடர்ந்து அவரை கண்காணித்தது ஓமன் அரசு. அவர் இணையதளங்களில் பயங்கரவாதம் தொடர்பான தகவல்களை தேடி, படித்து வந்திருக்கிறார். இதன்பின்னர் ஓமன் ஏர் நிறுவனம் அவரை விமானிக்கான பணியில் இருந்து மாற்றி, அலுவலகத்தில் பணியமர்த்தியது.
ஆனால், அந்த வேலையில் தொடர்ந்து அவர் நீடிக்கவில்லை. அலுவலக வேலை என்றதும் அவர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். 2024-ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்நிலையில், ஓமன் நாட்டின் துணை விமானியிடம் பயங்கரவாதம் தொடர்பான விசாரணையை ஆஸ்திரேலிய அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். 2014-ம் ஆண்டு அவருக்கு மாணவர் விசா வழங்கப்பட்டு உள்ளது. 2015 முதல் 2017 வரையிலான ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆஸ்திரேலியாவில் அவர் படித்துள்ளார்.
அவர் 2019-ம் ஆண்டில் எந்த படிப்பையும் தொடரவில்லை. இதனால், அவருக்கான மாணவர் விசா ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த சூழலில், ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத பயிற்சியை பெற்றாரா? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது என பயங்கரவாத ஒழிப்பு குழுவினர் தெரிவித்தனர்.
இதுதவிர, இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம்ஷைர் நியூ பல்கலைக்கழகத்தில் இணையதளம் வழியே படித்து வந்த தகவலை அவர் லிங்ட்இன் பக்கத்தில் பகிர்ந்து இருந்த தகவலை சி.என்.என். வெளிப்படுத்தி இருந்தது.