உலக செய்திகள்

ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி இன்று இந்தியா வருகை

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ இந்தியா வந்துள்ளார்.

டெல்லி,

இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து குவாட் என்ற அமைப்பை உருவாகியுள்ளன. இந்தோ-பசுபிக் கடல் பகுதியில் அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சியை நிலைநாட்ட இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு இன்று நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ இந்தியா வந்துள்ளார்.

அதேவேளை, இம்மாநாட்டில் பங்கேற்க ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி பென்னி வாங்க் இன்று இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். அதேபோல், ஜப்பான் வெளியுறவுத்துறை மந்திரி டுஷிமிசு மொடிகியும் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.

தலைநகர் டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் இந்தோ - பசுபிக் கடல் பகுதியின் பாதுகாப்பு, சர்வதேச அரசியல் சூழ்நிலை, மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.

இந்தியா வரும் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி பென்னி வாங்க் இந்தியா - ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை மந்திரிகள் மட்டத்திலான 17வது ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். அவர் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருடன் ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.