தெஹ்ரான்,
அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந் தேதி போர் தொடுத்தன. இதில் முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தற்போது அமெரிக்கா-ஈரான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.இதற்கிடையே கொல்லப்பட்ட ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமனெயின் உடல் அடக்கத்துக்கான இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நாளை தொடங்குகின்றன. இறுதிச்சடங்குகள் மற்றும் உடல் அடக்கம் செய்யும் நிகழ்வுகளை 6 நாட்கள் நடத்த ஈரான் அரசு திட்டமிட்டுள்ளது.இதையடுத்து இறுதிச்சடங்கிற்காக அயத்துல்லா அலி காமனெயின் உடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டி தலைநகர் தெஹ்ரானுக்கு கொண்டு வரப்பட்டது. அங்குள்ள மத வழிபாட்டு வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.பின்னர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்ட இடத்துக்கு சவப்பெட்டி கொண்டு செல்லப்பட்டு அங்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அதன்பின் இமாம் கமேனி ஹுசைனியா வளாகத்திற்கு அருகில் இறுதிச்சடங்கு நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு சவப்பெட்டி கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து மொசல்லா பெரிய மசூதிக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு நாளை மற்றும் நாளை மறுநாள் பொதுமக்கள் பார்வைக்காக அயத்துல்லா அலி காமெனியின் உடல் வைக்கப்படுகிறது. பின்னர் அவரது உடல் ஈரான் மற்றும் அண்டை நாடான ஈராக்கின் நகரங்கள் வழியாக ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும். 6-ந்தேதி தெஹ்ரான் நகரின் மையப்பகுதியில் பிரம்மாண்டமான ஊர்வலம் தொடங்குகிறது.தெஹ்ரான் வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட பிறகு, 7-ந்தேதி தெஹ்ரானில் இருந்து சுமார் 120 கி.மீ. தொலைவில் உள்ள ஈரானின் புனித நகரமான கோம் நகருக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்படும். அங்கு சடங்குகள் நடைபெறும். அதன்பின் 8-ந்தேதி ஈராக்கில் உள்ள கர்பலா நகருக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு சடங்குகள் நடைபெறும். பின்னர் 9-ந்தேதி ஈரானின் வடகிழக்கு புனித நகரமான மஷ்ஹத் நகரில் அயத்துல்லா அலி காமனெயின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.ஈரான் முழுவதும் லட்சக்கணக்கான ஆதரவாளர்களை வரவழைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த 6 நாள் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்த திரள்வார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் வகையில் போக்குவரத்து, தங்குமிடம் மற்றும் உணவு வசதிகள் செய்யப்படுகின்றன.
அயத்துல்லா அலி கமேனிகொல்லப்பட்டதையடுத்து அவரது மகன் **மொஜ்தபா கமேனி** ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவின் தாக்குதலில் காயம் அடைந்த மொஜ்தபா இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை.
இந்த நிலையில், தந்தை அயத்துல்லா அலி காமனெயின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை இந்தியாவில் உள்ள ஈரானிய உச்ச தலைவரின் பிரதிநிதியான **அயத்துல்லா ஹக்கீம் இலாஹி** உறுதிப்படுத்தியுள்ளார்.பாதுகாப்பு காரணங்கள் மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.