ரோம்,
இத்தாலி நாட்டில் உள்ள பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் போன்ற முகத்தை மூடும் ஆடைகளுக்கு தடை விதிக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி, முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
இத்தாலி நாட்டின் ரோம் நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 'பிரதர்ஸ் ஆப் இத்தாலி' கட்சியின் இளைஞர் அணி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி, பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் போன்ற முகத்தை மூடும் ஆடைகளுக்கு தடை விதிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார்.
அதாவது பள்ளிகளுக்கு வரும் மாணவிகள் தங்களின் முகத்தை மறைக்காமல், வெளிப்படையாக வர வேண்டும் என்று பிரதமர் திட்டவட்டமாக கூறியுள்ளார். பாரம்பரியம் என்ற பெயரில் எந்தவொரு இளம் பெண்ணும் தன் முகத்தை மறைக்க கட்டாயப்படுத்தக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். முழு உடலையும் மூடும் புர்கா மற்றும் கண்களைத் தவிர மற்ற பகுதிகளை மூடும் நிகாப் ஆகியவற்றுக்கு மட்டுமே இத்தடை பொருந்தும். தலைமுடியை மட்டும் மூடும் ஹிஜாப் ஆடைக்கு இந்த முன்மொழிவில் தடை எதுவும் குறிப்பிடப்படவில்லை.
புர்கா தடை மட்டுமின்றி, ஒரு வகுப்பறையில் இத்தாலிய மொழி தெரியாத வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போது, அது மாணவர்களின் கல்வி மற்றும் ஒருங்கிணைப்பைக் கெடுக்கும் என்பதால், ஒரு வகுப்பில் இவ்வளவு தான் வெளிநாட்டு மாணவர்கள் இருக்க வேண்டும் என்ற சட்டப்பூர்வ வரம்பு கொண்டு வரப்பட உள்ளது.
இத்தாலி பள்ளிகளில் சுமார் 11.6% வெளிநாட்டு மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும், பள்ளி நடைமுறைகளோடு ஒத்துப்போவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் வெளிநாட்டு மாணவர்களின் பெற்றோர்கள், கட்டாயமாக இத்தாலிய மொழியைக் கற்க வேண்டும் என்ற நிபந்தனையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
பிரதமர் மெலோனி அறிவித்த இந்த திட்டம், ஒரு சட்ட முன்மொழிவு மட்டுமே ஆகும். இது விரைவில் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படும். அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பிறகு, இது சட்டமாக மாறுவதற்கு 60 நாட்களுக்குள் இத்தாலி நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். நாடாளுமன்ற ஒப்புதலுக்கு பிறகே இது நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும். இந்த செய்தி இத்தாலி மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பெரும் அரசியல் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.