image courtesy : ANI 
உலக செய்திகள்

இந்தியாவிடம் இருந்து ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்: என்ன காரணம் தெரியுமா?

இந்தியாவில் இருந்து குஜராத் ஹில்சா மீன்களை இறக்குமதி செய்வதை வங்காளதேசம் திடீரென நிறுத்தியுள்ளது.

டாக்கா,

இந்தியாவில் இருந்து குஜராத் ஹில்சா மீன்களை இறக்குமதி செய்வதை வங்காளதேசம் திடீரென நிறுத்தியுள்ளது. இறக்குமதியாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த தடையில்லா சான்றிதழ்களில் 103 சான்றிதழ்களை அந்நாட்டு மீன்வளத்துறை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வங்காளதேசம் உலகிலேயே அதிக அளவில் ஹில்சா மீனை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. அங்கு உள்நாட்டு ஹில்சா மீன் உற்பத்தி குறைந்த நிலையில், கடந்த சில வாரங்களாக இந்தியாவில் இருந்து ஹில்சா மீன் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. குஜராத்தின் பரூச் பகுதியில் இருந்து பெறப்பட்ட ஹில்சா மீன்கள் துறைமுகம் வழியாக வங்காளதேசத்துக்கு அனுப்பப்பட்டன. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 500 டன் ஹில்சா மீன் இந்தியாவில் இருந்து வங்காளதேசத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக மீன் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

103 சான்றிதழ்கள் ரத்து

இந்த நிலையில், வங்காளதேச மீன்வளத்துறை கடந்த 23-ந்தேதி இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 103 தடையில்லா சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து மீன்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இறக்குமதியை நிறுத்துவதற்கான குறிப்பிட்ட காரணத்தை வங்காளதேச மீன்வளத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. எனினும், இந்திய ஹில்சா மீன்கள் உள்நாட்டு அல்லது பத்மா நதி ஹில்சா மீன்கள் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கவும், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தை கட்டுப்படுத்தவும், உள்நாட்டு மீன் உற்பத்தியை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என அந்நாட்டு வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இறக்குமதியாளர்களுக்கு இழப்பு

இந்த திடீர் முடிவால் இந்தியாவில் ஏற்கனவே ஹில்சா மீன்களை வாங்கி வைத்திருந்த வங்காளதேச இறக்குமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வாங்கிய மீன்களை மீண்டும் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். வங்கதேசத்தின் பத்ம நதியில் காணப்படும் ஹில்சா மீன், மிகவும் கொழுப்புச்சத்து மிக்கதாகவும், சுவையாகவும் இருக்கும். இவை லேசான கசப்புத்தன்மை உடையவை. இந்த மீன்கள் வங்காளதேசத்தில் கிலோ 2,500 வரைக்கும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT