டாக்கா,
வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு ஆட்சி செய்து வந்த நிலையில், வங்காளதேச விடுதலை போரில் ஈடுபட்டவர்களின் உறவினர்களுக்கு, அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் வன்முறையாக வெடித்தது.
இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு முடிவு ஏற்படுத்த வலியுறுத்தி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், போராட்டத்திற்கு 2 மாதங்களில் 500-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.
இதனால், நாட்டில் பதற்ற நிலை ஏற்பட்டது. தீவிர போராட்டம் தொடர்ச்சியாக பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.
வங்காளதேசத்தின் டாக்கா நகரில் இருந்து, அவருடைய இளைய சகோதரி ஷேக் ரெஹானாவுடன் ராணுவ விமானத்தில் ஷேக் ஹசீனா புறப்பட்டார். இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அவர் செல்வார் என தகவல்கள் வெளியான நிலையில், இந்தியாவில் அவர் தஞ்சமடைந்துள்ளார். அவரை வங்காளதேசத்திடம் திரும்ப ஒப்படைக்கும்படி அந்நாட்டு அரசு இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்து உள்ளது.
இந்நிலையில், வங்காளதேசத்தில் பேராசிரியர் முகமது யூனூஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. இதில், சிறுபான்மையினருக்கு எதிராக கடந்த டிசம்பர் மத்தியில் பெரும் கலவரம் வெடித்தது. இந்து சிறுபான்மையின மக்கள் அதிக அளவில் கொன்று குவிக்கப்பட்டனர்.
இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. எனினும், பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல், நிவாரண உதவி என எதற்கும் உறுதியளிக்கப்படாத சூழலும், மர்ம கும்பலின் கொடூர தாக்குதல் தொடர்வதும் நடந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட இந்து சிறுபான்மையின தொழிலதிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சூழலில், 13-வது தேசிய நாடாளுமன்றத்திற்கான பொது தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. காலை 6 மணி முதல் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர்.
இதில், அந்நாட்டின் இடைக்கால தலைவர் மற்றும் தலைமை ஆலோசகரான யூனூஸ் குல்ஷான் மாடல் பள்ளி மற்றும் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு சாவடிக்கு இன்று காலை வந்து வாக்களித்து விட்டு சென்றார்.
இந்த தேர்தல் பற்றி தேர்தல் ஆணையத்தின் மூத்த செயலாளர் அக்தர் அகமது இன்று மதியம் கூறும்போது, நாடு முழுவதும் அமைக்கப்பட்டு உள்ள 42 ஆயிரத்து 651 மையங்களில் மதியம் 12 மணி வரை எந்தவித தடையும் இன்றி வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
இதில், 32 ஆயிரத்து 789 வாக்கு சாவடிகளில் 32.88 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இது மொத்தமுள்ள வாக்கு சாவடிகளில் 77 சதவீதம் ஆகும் என கூறினார்.
முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மரணம் மற்றும் அவருடைய நீண்டகால முக்கிய எதிரியான, 2 ஆண்டுகளுக்கு முன் பதவி விலகிய முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தேர்தலில் போட்டியிட தடை என இரு பெரும் முக்கிய விசயங்கள் நடந்துள்ள சூழலில் இந்த தேர்தல் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.