டாக்கா: வங்காளதேசத்தில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினர் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த சதி செய்வதாக பிரதமர் தாரிக் ரகுமான் குற்றம்சாட்டியுள்ளார்.
வங்காளதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு மாணவர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா பதவியில் இருந்து விலகி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து அவரது அவாமி லீக் கட்சியின் செயல்பாடுகளுக்கு இடைக்கால அரசு தடை விதித்தது. இந்நிலையில், ஷேக் ஹசீனா டிசம்பர் மாதம் வங்காளதேசம் திரும்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்காக புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி அவர் விடுத்த கோரிக்கையை அந்நாட்டு அரசு நிராகரித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவாமி லீக் கட்சி சார்பில் கடந்த வியாழக்கிழமை நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் வெடித்தன. டாக்காவில் அதிகாலை நேரத்தில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. பல்வேறு பகுதிகளில் பேருந்துகள், லாரிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. சிட்டகாங்கில் முன்னாள் இடைக்கால அரசு தலைவர் முகமது யூனுசின் பூர்வீக வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டது. மேலும், கோபால்கஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் காவல் நிலையம், வீடுகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த வன்முறை சம்பவங்களில் பலர் காயமடைந்தனர்.
இதற்கிடையே, வடமேற்கு வங்காளதேசத்தின் லால்மோனிர்ஹாட் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் தாரிக் ரகுமான், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினர் மீது குற்றம்சாட்டினார்.அப்போது அவர் கூறுகையில், "நாட்டில் மீண்டும் தீ வைப்பு சம்பவங்கள், கொலைகள், பயங்கரவாதம் மற்றும் மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் அரசியல் வேண்டாம் என்பதுதான் மக்களின் விருப்பம். நாட்டின் எதிர்காலத்துடன் விளையாட நினைக்கும் பயங்கரவாதிகளுக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பதிலடி கொடுக்க வேண்டும்" என்றார்.
மேலும், நாட்டை விட்டு வெளியேறிய பிறகும் அவாமி லீக் கட்சியினர் தீ வைப்பு மற்றும் கொலை அரசியலைத் தொடர்ந்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். எல்லைக்கு அப்பால் உள்ள தங்களது ஆதரவாளர்களை மகிழ்விப்பதற்காக வங்காளதேசத்தில் சதி நடைபெறுவதாகவும் அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, வன்முறையைக் கட்டுப்படுத்த 7 மாவட்டங்களில் சுமார் 3,000 துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தலைநகர் டாக்காவில் மட்டும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா நாடு திரும்புவது தொடர்பான விவகாரம் ஒருபுறம் இருக்க, அவரது கட்சியினரின் போராட்டமும் வன்முறை சம்பவங்களும் அந்நாட்டில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளன.