டாக்கா,
வங்கதேச வான்படையை நவீனப்படுத்தும் நோக்கில், சீனாவிடம் இருந்து 20 நவீன போர் விமானங்களை வாங்க அந்த நாடு அதிகாரப்பூர்வமாக முடிவு செய்துள்ளது. வங்கதேச பிரதமரின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை ஆலோசகர் ஜாஹித் உர் ரஹ்மான் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
20 முதல் 24 அதிநவீன ஜே-10சிஇ ரக போர் விமானங்கள், அவற்றுக்கான ஏவுகணைகள், உதிரிபாகங்கள் மற்றும் விமானிகளுக்கான பயிற்சி உள்ளிட்ட ஒட்டுமொத்த பாதுகாப்பு தொகுப்பின் மதிப்பு சுமார் ரூ.19,000 கோடிக்கும் மேல் ஆகும்.
சர்வதேச சந்தை மதிப்பின்படி ஒரு தனித்தனி ஜே-10சிஇ போர் விமானத்தின் விலை சுமார் 960 கோடிக்கும் மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் தற்போதைய நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, இந்த பெரும் தொகையை அடுத்த 10 ஆண்டுகளில் சீனாவுக்கு தவணை முறையில் செலுத்தி முடிக்க வங்கதேச இடைக்கால அரசு திட்டமிட்டுள்ளது.
சீனாவின் 'செங்டு' நிறுவனம் தயாரிக்கும் இந்த ஜே-10சிஇ விமானங்கள் 4.5 தலைமுறை வகையை சேர்ந்தவை. ஒரே நேரத்தில் வான்வழி தாக்குதல், தரைப்படைக்கு ஆதரவு மற்றும் உளவு வேலைகளில் ஈடுபடும் பன்முகத்தன்மை கொண்டது.
எதிரிகளின் இலக்குகளை மிக துல்லியமாக கண்டறிந்து தாக்கும் மேம்பட்ட ரேடார் வசதி இதில் உள்ளது. இதில் பொருத்தப்படும் பிஎல்-15 ஏவுகணைகள் வான்வெளியில் வெகுதொலைவில் உள்ள எதிரி இலக்குகளை துரத்தி சென்று அழிக்கும் வல்லமை கொண்டவை.
பிரான்ஸ் நாட்டின் 'ரபேல்' அல்லது ஐரோப்பாவின் 'யூரோபைட்டர் டைபூன்' போன்ற மேற்கத்திய நாடுகளின் போர் விமானங்களுடன் ஒப்பிடும்போது, சீன விமானங்கள் விலை குறைவாகவும், அதே தரம் கொண்டதாகவும் இருப்பதாக வங்கதேசம் கருதுகிறது.
வங்கதேச வான்படை தற்போது பயன்படுத்தி வரும் மிகவும் பழமையான, பனிப்போர் காலத்து சீன தயாரிப்பானஎப் 7 ரக விமானங்களை முழுமையாக ஓய்வு பெற செய்துவிட்டு, இந்த புதிய விமானங்களை மாற்றீடு செய்யவுள்ளது. பாகிஸ்தான் நாட்டிற்கு அடுத்தபடியாக, சீனாவின் இந்த அதிநவீன ஜே-10சிஇ போர் விமானங்களை வாங்கும் உலகின் 2-வது வெளிநாடு வங்கதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தத்திற்கான வரைவு அறிக்கை தற்போது இறுதி செய்யப்பட்டு, வங்கதேச பாதுகாப்பு அமைச்சகம், நிதி அமைச்சகம் மற்றும் ஆயுதப்படை பிரிவின் இறுதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த விமானங்கள் அனைத்தும் வரும் 2027-ஆம் ஆண்டிற்குள் வங்கதேச வான்படையில் முழுமையாக சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்டை நாடான வங்கதேசம், சீனாவிடம் இருந்து இவ்வளவு பெரிய அளவில் ஆயுதங்களை வாங்குவது தெற்காசிய பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.