டாக்கா,
வங்காளதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் மாணவர் போராட்டம் தொடர்ச்சியாக, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதனையடுத்து வங்காளதேசத்தில், பேராசிரியர் முகமது யூனூஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.
இதன்பின்னர், பிப்ரவரி 12-ல் பொது தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. அதன்படி, வங்காளதேசத்தில் 13-வது தேசிய நாடாளுமன்றத்திற்கான பொது தேர்தல் 12-ந்தேதி நடைபெற்றது. அதன்பின்னர் வாக்கு எண்ணிக்கையும் உடனடியாக நடந்து முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதில், வங்காளதேச தேசியவாத கட்சி வேட்பாளர்கள் 209 இடங்களில் வெற்றி பெற்றனர். அக்கட்சி தலைமையிலான கூட்டணி, ஆட்சியமைக்க தேவையான அளவுக்கும் கூடுதலாக, மொத்தம் 212 இடங்களை கைப்பற்றி உள்ளது. ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி 68 இடங்களை வென்றுள்ளது.
இதனை தொடர்ந்து, வங்காளதேச தேசியவாத கட்சியை சேர்ந்த தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராகிறார். அவருடைய புதிய அமைச்சரவை இன்று பதவியேற்க உள்ளது. வங்காளதேச ஜனாதிபதி முகமது சஹாபுதீன் மந்திரிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
இதனை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்களுக்கும் அழைப்பு விடப்பட்டது. இதனையேற்று இந்தியா சார்பில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அந்நாட்டின் டாக்கா விமான நிலையத்திற்கு சென்று சேர்ந்துள்ளார். அவரை அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செயலாளர் நஜ்ருல் இஸ்லாம் வரவேற்றார். இதேபோன்று இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பூடான் பிரதமர் ஷெரிங் தோப்கேவும் சென்றுள்ளார்.