உலக செய்திகள்

16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகம் பயன்படுத்த தடை; ஸ்பெயின் திட்டம்

டென்மார்க் மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகளும் வயது வரம்புகளை நிர்ணயிப்பது பற்றி பரிசீலித்து வருகின்றன.

பார்சிலோனா,

துபாயில் உலக அரசுகளின் உச்சி மாநாடு நேற்று நடந்தது. இதில் ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சாஞ்செஸ் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறும்போது, ஸ்பெயினில் 16 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் சமூக ஊடகம் பயன்படுத்த தடை விதிக்க அரசு திட்டமிட்டு வருகிறது.

அடிமையாவது, தகாத விசயங்கள், ஆபாச படம், வன்முறை போன்ற விசயங்களுக்கான இடங்களாக சமூக ஊடகங்கள் உள்ளன. இதனை ரொம்ப காலத்திற்கு நாங்கள் ஏற்கமாட்டோம். டிஜிட்டல் உலக தீங்கில் இருந்து அவர்களை நாங்கள் பாதுகாப்போம் என கூறினார்.

எனினும், இதற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டும். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் இந்த தடை அமலுக்கு வந்தது. தடையை அமல்படுத்திய உலகின் முதல் நாடு என்ற பெருமையையும் பெற்றது.

இதேபோன்று பிரான்ஸ், டென்மார்க் மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகளும் தங்களுடைய நாடுகளில் வயது வரம்புகளை நிர்ணயிப்பது பற்றி பரிசீலித்து வருகின்றன.

இங்கிலாந்திலும் 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களை தடை செய்வது பற்றிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், இந்த நடைமுறையை கொண்டு வருவது பயன் தராது என்றும் கடினம் என்றும் சமூக ஊடக நிறுவனங்கள் கூறி வருகின்றன.