வாஷிங்டன்,
அமெரிக்க நாட்டின் ஆஸ்பென் நகரில் பசியோடு இருந்த கரடி ஒன்று அங்குள்ள சந்தையின் பேக்கரிக்குள் புகுந்து, ரொட்டிகளை ருசித்து சாப்பிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் நடப்பு ஆண்டில் கடுமையான வறட்சி நிலவியதால், காடுகளில் கரடிகளுக்கு இயற்கை உணவுகள் கிடைக்கவில்லை. இதனால் குளிர்கால உறக்கத்திற்கு செல்வதற்கு முன் உடல் எடையைக் கூட்டுவதற்காக, உணவு தேடி கரடிகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சந்தைப் பகுதிக்குள் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தன.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் ஆஸ்பென் நகரில் வாரந்தோறும் நடக்கும் 'ஆஸ்பென் சாட்டர்டே மார்க்கெட்' என்ற உழவர் சந்தை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி அன்று அதிகாலையில் வியாபாரிகள் கடைகளை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள ‘லூயிஸ் ஸ்விஸ்’ என்ற பிரபல பேக்கரி ஸ்டாலுக்குள் திடீரென பெரிய கருப்பு கரடி ஒன்று நுழைந்தது. கரடியின் திடீர் வருகையால் அதிர்ச்சியடைந்த வியாபாரிகளும் பொதுமக்களும் அலறியடித்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர்.
அங்கு வந்த கரடியோ மக்களை அச்சுறுத்தாமல், பசியின் காரணமாக மேஜையில் வைக்கப்பட்டிருந்த புதிய ரொட்டிகள் மற்றும் வெண்ணெய் மற்றும் நெய் வைத்து செய்யப்படும் இனிப்பு திண்பண்டங்களையும் மிகவும் நிதானமாக ருசித்துச் சாப்பிடத் தொடங்கியது. சுடச்சுட இருந்த பேக்கரி உணவுகளை அது ரசித்து சாப்பிட்டது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள், கரடியை அங்கிருந்து பாதுகாப்பாக விரட்டினர். சந்தையை விட்டு வெளியேறிய கரடி, அருகில் இருந்த ஒரு மரத்தின் மீது ஏறிக்கொண்டது. பின்னர் அதிகாரிகள் அதை பத்திரமாக அப்புறப்படுத்தினர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
குளிர்கால உறக்கத்திற்காக கரடிகள் தங்களுக்குத் தேவையான கொழுப்பைச் சேமிக்க அதிக உணவைத் தேடும் காலக்கட்டம் இது என்றும், காடுகளில் உணவு பற்றாக்குறை நிலவுவதால் இது போன்ற குடியிருப்புப் பகுதிகளுக்குள் அவை நுழைவதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பொதுமக்கள் மாலை நேரங்களில் தனியாக வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கரடி மிகவும் கூலாக ரொட்டிகளைத் தின்ற வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.