நீஸ்,
கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பிரதமர் மோடி பிரதமர் ஆனார். இப்போது 3-வது முறையாக பதவியில் நீடித்து வருகிறார். அவரது அரசு 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.இந்த 12 ஆண்டு காலத்தில் அவர் பல்வேறு உலகநாடுகளுக்கு சென்று வந்துள்ளார். சமீபத்தில் ஐக்கிய அரபு குடியரசு, ஹாலந்து, சுவீடன், நார்வே, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் அவர் மீண்டும் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த முறை ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பிரான்ஸ் மற்றும் சுலோவாக்கியா நாடுகளுக்கு செல்கிறார். இதனையடுத்து அவர் நேற்று சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். பிரான்சில் உள்ள நீஸ் விமான நிலையத்தை மோடி நேற்று இரவு சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் பிரதமர் மோடி தான் தங்கும் ஓட்டலுக்கும் சென்றார். அங்கு அவரை இந்தியா வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்றனர்.
இந்தநிலையில், பிரான்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டுப் பிரதமர் இமானுவேல் மேக்ரான் ஆரத்தழுவி வரவேற்றார். ‘பாரத் இன்னொவேட்ஸ்’ என்ற தலைப்பில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.
மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில்,
இந்தியாவின் பாதுகாப்புத் துறையும் புத்தாக்கத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது. இன்று, பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொடர்பான நூற்றுக்கணக்கான புத்தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் அற்புதமான பணிகளைச் செய்து வருகின்றன. சமீபத்தில், இந்தியாவின் அணுசக்தித் துறையிலும் முக்கிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இந்தியா தனது அறிவாலும் புத்தாக்கத்தாலும் உலகிற்குப் புதிய திசையைக் காட்டியுள்ளது. கணிதம் முதல் வானியல் வரை, மருத்துவம் முதல் யோகா வரை, இந்தியாவின் பங்களிப்பே ஒட்டுமொத்த மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக அமைந்துள்ளது. இன்று, இந்தப் பாரம்பரியத்திற்கு நாம் ஒரு புதிய வேகத்தையும் புதிய திசையையும் அளித்துள்ளோம். புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிப்பது என்பது இந்தியாவின் மரபணுவிலேயே இருக்கிறது.
மத்திய கிழக்கு பதிகளில் நிலவும் மோதல்கள் மற்றும் பருவநிலை மாற்றம் அதிகரித்து வரும் தாக்கங்களுக்கு மத்தியில், உலகம் முன்னெப்போதும் இல்லாத பெரும் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. ஆனால் இன்று, மனிதகுலத்தின் முன் சவால்கள் இருந்தாலும், அளவற்ற வாய்ப்புகளும் உள்ளன. செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கணினி, உயிரித் தொழில்நுட்பம், விண்வெளித் தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட பொருட்கள் ஆகியவை மனிதகுலத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் தொழில்நுட்பங்களாகும். இவையே மனித நாகரிகத்தின் அடுத்த அத்தியாயங்கள். ஒவ்வொரு தொழில்நுட்பப் புரட்சியும் மனிதகுலத்திற்கு ஒரு புதிய வாய்ப்பை அளிக்கிறது, மேலும் ஒவ்வொரு வாய்ப்பும் ஒரு புதிய பொறுப்பையும் கொண்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநாட்டை முடித்துக்கொண்டு நீஸ் நகரில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில் இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது, வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு, முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்கள்.
பின்னர் பிரதமர் மோடி பிரான்சில் இருந்து 2 நாள் பயணமாக சுலோவாக்கியவுக்கு செல்கிறார். அங்கு அந்நாட்டு அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி, பிரதமர் ராபர்ட்பிகோ ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன்பின் மீண்டும் பிரான்சுக்கு திரும்பும் மோடி 16,17 -ம் தேதிகளில் எவியன் நகரில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
18-ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.