ஆக்லாந்து
2030-ம் ஆண்டுக்குள் நியூசிலாந்து-இந்தியா இடையே இருதரப்பு வர்த்தகம் இரட்டிப்பாகும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பிரதமர் மோடி இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், முதலில் இந்தோனேசியா சென்ற அவர், அந்த பயணம் நிறைவடைந்ததும், ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். அவருக்கு மெல்போர்ன் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, இந்தியாவின் அணுசக்தி திட்டங்களுக்கு உதவும் வகையில் இந்தியாவுக்கு யுரேனியம் வழங்கவும், இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க 'ககன்யான்' விண்வெளித்திட்டத்தில் இணையவும் ஆஸ்திரேலியா ஒப்புக்கொண்டது.
இந்த திட்டத்திற்கு ஆதரவாக, கோகோஸ் தீவுகளில் தற்காலிக விண்வெளி கண்காணிப்பு நிலையம் அமைக்கவும் ஆஸ்திரேலியா ஒப்புக்கொண்டுள்ளது. இரு நாடுகளிடையே அணுசக்தி, கடல்பாதுகாப்பு போன்ற முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்த பயணம் நிறைவடைந்ததும் பிரதமர் மோடி நியூசிலாந்துக்கு சென்றார். அவரை வரவேற்கும் வகையில், அந்நாட்டின் சார்பில் பாரம்பரிய மற்றும் கலாசார முறையிலான பாடலுடன் கூடிய நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை அவர் ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சான் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின்னர் பிரதமர் மோடி, வர்த்தக மற்றும் விளையாட்டு துறை சார்பில் ஆக்லாந்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் கூட்டத்தில் பேசும்போது, இந்தியா-நியூசிலாந்து இடையே, 9 மாதங்கள் என்ற சாதனையான காலகட்டத்திற்குள் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளது.
இதனால், உங்கள் அனைவருக்கும் சந்தை அணுகல், முதலீடு, சேவைகள், தொழில் நுட்பம் மற்றும் பதவி உயர்வுகள் உள்ளிட்ட புதிய வாய்ப்புகள் உருவாகும். புதிய ஆர்வத்துடன் இணைந்து பணியாற்றும்போது, 2030-ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகம் இரட்டிப்பாகும் என்றும் பேசியுள்ளார்.
இந்தியாவில் அடுத்த 15 ஆண்டுகளில் 20 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய நியூசிலாந்து முன்வந்துள்ளது. இது வெறும் முதலீடு என்றில்லாமல், இந்தியாவின் வளர்ச்சி பயணத்தின் ஒரு பகுதிக்கான உள்ளார்ந்த ஈடுபாடாகவும் உள்ளது என்று பேசியுள்ளார்.