இத்தாலியில் பள்ளிகளில் மாணவிகள் புர்கா, நிகாப் போன்ற முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணியத் தடை விதித்து புதிய கல்விச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், பள்ளி வகுப்புகளில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை 30 சதவீதமாகக் கட்டுப்படுத்தவும் அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் தலைமையிலான அரசு இந்தக் கல்வி சீர்திருத்த நடவடிக்கைகளைக் கொண்டுவந்துள்ளது.
புதிய சட்டத்தின்படி, பள்ளிகளில் நடைபெறும் பாடத்திட்ட மற்றும் பாடத்திட்டம் சாராத நிகழ்ச்சிகளில் முகத்தை அடையாளம் காண முடியாத வகையில் மறைக்கும் ஆடைகளை அணிய அனுமதி இல்லை. குறிப்பாக, முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றுக்கு இந்தத் தடை பொருந்தும்.இந்த விதிமுறையை மீறினால் 200 யூரோ முதல் 1,000 யூரோ வரை அபராதம் விதிக்கப்படும். மாணவர்கள் சிறுவர்களாக இருந்தால், அவர்களின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் அபராதம் செலுத்த வேண்டும்.
பள்ளிகளின் முதலாம் ஆண்டு வகுப்புகளில் வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 30 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் புதிய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இத்தாலிய மொழியில் போதிய அறிவு பெற்ற மாணவர்களுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது.மேலும், குழந்தைகள் கல்வி முறையில் ஒருங்கிணைவதில் சிரமம் ஏற்பட்டால், அவர்களின் பெற்றோருக்கு இத்தாலிய மொழிப் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படும்.
இந்தக் கல்வி சீர்திருத்த மசோதாவுக்கு இத்தாலி நாடாளுமன்றத்தின் கீழவையில் 142 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 112 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். 4 பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. இதற்கு முன்னதாக நவம்பர் 20-ம் தேதி மேலவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வெளிநாட்டு மாணவர்களையும் முஸ்லிம் மாணவர்களையும் பாகுபாட்டுடன் நடத்தும் நடவடிக்கை என விமர்சித்துள்ளன. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 'பள்ளியில் யாரும் வெளிநாட்டவர் இல்லை' என்ற வாசகம் அடங்கிய பதாகையையும் ஏந்தி எதிர்ப்புத் தெரிவித்தனர்.