கொல்கத்தா
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பதவிக்காலம் மே 7-ந்தேதியுடன் முடிவடைய உள்ள சூழலில், மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல், மாநிலத்தில் 2 கட்டங்களாக நடைபெற்றது.
இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்பட்டது. வரலாறு காணாத வகையில் 2 கட்ட தேர்தலிலும் 90 சதவீதத்திற்கும் கூடுதலாக வாக்குகள் பதிவாகின.
மேற்கு வங்காளத்தில் 3 முறை முதல்-மந்திரியாக பதவி வகித்த மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 4-வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது. எனினும், தேர்தல் முடிவில் அக்கட்சி தோல்வியை தழுவியது.
மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. கடந்த தேர்தலில் 77 தொகுதிகளையே பெற்றிருந்தது. தற்போது, 207 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இது பெரும்பான்மை பெற வேண்டிய 148 என்ற எண்ணிக்கையை காட்டிலும் மிக அதிகம் ஆகும். மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. ஆட்சியை பிடித்த நிலையில், பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் குஷ் தேசாய் கூறும்போது, பிரதமர் மோடியின் சமீபத்திய, வரலாற்று சிறப்புமிக்க மற்றும் உறுதியான தேர்தல் வெற்றியை பெற்றதற்காக ஜனாதிபதி டிரம்ப் வாழ்த்து தெரிவித்து உள்ளார் என்றார்.