உலக செய்திகள்

ஈரானில் கருப்பு மழை; பொதுமக்களுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளது.

தெஹ்ரான்

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதில், ஈரானில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் கரும்புகை வான் வரை பரவி வருகிறது. இந்த நிலையில், அந்நாட்டில் செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்பு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏனெனில், ஈரானில் கருப்பு மழை பெய்துள்ளது. அமில மழையும் அதனுடன் சேர்ந்து கொண்டது. இதனால் சுவாச கோளாறுகள், பாதிப்புகள் போன்றவை ஏற்பட கூடும். அதனால், பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளது.

ஈரானில், உலக சுகாதார அமைப்பின் அலுவலகம் ஒன்று உள்ளது. அதன் அதிகாரிகள் அந்நாட்டு சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அவர்கள் நிருபர்களிடம் கூறும்போது, இந்த வாரத்தில், எண்ணெய்யுடன் கூடிய மழை பெய்தது என எங்களுக்கு அதிகளவில் தகவல்கள் கிடைக்க பெற்றன.

இது மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்த கூடும் என அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மெயர் கூறினார். இதற்கு எடுத்துக்காட்டாக தெஹ்ரானில் உள்ள அதன் அலுவலக நுழைவு பகுதியில், தூய்மை பணியாளர் ஒருவரால் தரையில், கருமை நிறத்தில் இருந்த திரவம் தூய்மை செய்யப்படும் வீடியோ ஒன்றையும் உலக சுகாதார அமைப்பின் ஊழியர் ஒருவர் வெளியிட்டு உள்ளார்.