வாஷிங்டன்,
அமெரிக்கா, ஈரான் இடையேயான மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா முடக்கியுள்ளது. மேலும், அரபிக்கடலில் ஹர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது அமெரிக்காவும், ஈரானும் மாறிமாறி தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதனிடையே, கடந்த சில நாட்களில் மட்டும் அரபிக்கடலில் ஓமன் அருகே சென்றுகொண்டிருந்த 3 இந்திய கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை, இந்த தாக்குதல் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோவை தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடினார். இந்த உரையாடலின்போது சரக்கு கப்பல்களில் தாக்குதல் நடத்தி 3 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மார்கோ ரூபியோவிடம் ஜெய்சங்கர் தனது கண்டனத்தை தெரிவித்தார்.
இந்நிலையில், ஹர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் வணிக கப்பல்கள் அனைத்து தங்கள் உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரிடம் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருடன் உரையாடினார். அப்போது ஹர்முஸ் ஜலசந்தியில் நடைபெற்ற சமீபத்திய நிகழ்வுகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். ஹர்முஸ் ஜலசந்தியில் அமைதி, பாதுகாப்பை உறுதி செய்யும் அமெரிக்க படையினரின் உத்தரவுகளுக்கு அவ்வழியாக செல்லும் அனைத்து வர்த்தக கப்பல்களும் கட்டுப்பட வேண்டும். ஈரான் துறைமுக முடக்கத்தை மீறுவது, சட்டவிரோதமாக ஈரான் கச்சா எண்ணெயை கொண்டு செல்வதை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாது
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹர்முஸ் ஜலசந்தியில் செல்லும் வணிக கப்பல்கள் அனைத்தும் எங்கள் உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும் என்று இந்தியாவை அமெரிக்கா வலியுறுத்திய நிகழ்வு இருநாடுகளுக்கு இடையேயான உறவில் மீண்டும் பிளவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.