உலக செய்திகள்

ஐரோப்பிய நாடுகளை உலுக்கிய வெடிகுண்டு மிரட்டல்; நூற்றுக்கணக்கான பள்ளிகளில் தீவிர சோதனை

ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளில் உள்ள பள்ளிகளுக்கும் மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்துள்ளன.

இத்தாலியில் 300-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதேபோன்ற மிரட்டல்கள் இங்கிலாந்து, அயர்லாந்து நாடுகளிலும் விடுக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இத்தாலியில் உள்ள ஆயிரக்கணக்கான பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 300-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பள்ளி வளாகங்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதனால் பெற்றோர்கள் அவசர அவசரமாக பள்ளிகளுக்கு சென்று தங்களது குழந்தைகளை அழைத்துச் சென்றனர்.

இத்தாலி பிரதமருக்கும் மிரட்டல்

இந்த மிரட்டல் மின்னஞ்சலில், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் காரிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டனஇதுகுறித்து பிரதமர் மெலோனி கூறுகையில், இந்த மிரட்டல்களால் உடனடி ஆபத்து எதுவும் இல்லை என்றும், போலீசார் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இங்கிலாந்து, அயர்லாந்திலும் மிரட்டல்

இதேபோல் ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளில் உள்ள பள்ளிகளுக்கும் மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்துள்ளன. இருப்பினும், அவை போலியான மிரட்டல்கள் என போலீசார் கருதியதால் பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட்டன. இந்த மிரட்டல்களின் பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற மிரட்டல் சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன

SCROLL FOR NEXT